உள்ளூர் செய்திகள்

சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பு

சென்னை: வரும் கல்வியாண்டில், 2, 3, 4, 5, 7, 8, 9, 10 ஆகிய வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி திட்டத்தில், மூன்று கோடியே 11 லட்சம் பாடப் புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. முதல் மற்றும் 6ம் வகுப்புக்கு, ஒரு கோடியே 35 லட்சம் பாடப் புத்தகங்கள் அச்சடித்து முடிக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நடப்பு கல்வியாண்டில், முதல் மற்றும் 6ம் வகுப்புக்கு மட்டும் சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்டது. வரும் கல்வியாண்டில், 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வருகிறது. இதையொட்டி, சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை தயாரிக்க, பாட வாரியாக நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு, பாடப் புத்தகங்கள் எழுதப்பட்டன. அதன்படி, ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி பாடப் புத்தகங்கள், 65 தலைப்புகளிலும், சிறுபான்மை மொழி பாடப் புத்தகங்கள், 132 தலைப்புகளிலும் தயாரிக்கப்பட்டன. வரும் ஜூனில் பள்ளிகள் திறந்ததும், பாடப் புத்தகங்களை வினியோகிக்க வேண்டும் என்பதால், இவற்றின் தற்போதைய நிலை குறித்து விவாதிப்பதற்கான ஆய்வுக் கூட்டம், பாடநூல் கழக அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. பாடநூல் கழக தலைவர் ஜீவரத்தினம் தலைமையில் நடந்த கூட்டத்தில், பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி, தொடக்கக் கல்வி இயக்குனர் மணி உட்பட, பலர் கலந்து கொண்டனர். சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை விரைவாக தயாரிப்பது குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பாடப் புத்தக தயாரிப்புப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து, பாடநூல் கழக தலைவர் ஜீவரத்தினம் கூறியதாவது: சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில், வரும் கல்வியாண்டில் வினியோகிக்க, முதல் மற்றும் 6ம் வகுப்புக்கு, ஒரு கோடியே 35 லட்சத்து 50 ஆயிரம் பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு தயாராக உள்ளன. 2 முதல் 5ம் வகுப்பு வரையும், 7 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மூன்று கோடியே 11 லட்சத்து 40 ஆயிரம் புத்தகங்கள் அச்சிட வேண்டும். இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதில், ஒரு கோடியே ஒரு லட்சத்து 85 ஆயிரம் பாடப்புத்தங்கள் அச்சிடப்பட்டு விட்டன. சிறுபான்மை மொழி பாடப் புத்தகங்களுக்கான, ‘சிடி’க்கள், பள்ளிக் கல்வித்துறையிடம் இருந்து இன்னும் வரவில்லை. ஒரு வாரத்திற்குள் அளிப்பதாக தெரிவித்துள்ளனர். மற்ற 65 பாடத் தலைப்புகளில், 33 தலைப்புகளுக்கான, ‘சிடி’க்களை (பாடப் புத்தகங்கள்), ஏற்கனவே கல்வித்துறை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். அவை அனைத்தும் தற்போது அச்சடிக்கப்பட்டு வருகின்றன. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, ஒரு கோடியே 47 லட்சத்து 85 ஆயிரத்து 700 புத்தகங்கள் தேவை. இவற்றில், 87 சதவீதம் அளவிற்கு புத்தகங்கள் அச்சிட்டு முடிக்கப்பட்டு விட்டன. அதிகமான பாடப் புத்தகங்கள் அச்சிட வேண்டியிருப்பதால், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்திடம் இருந்து, 24 ஆயிரம் டன் பேப்பரை வாங்கியுள்ளோம். 66 அச்சகங்களில், பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு 43 அச்சகங்களில், பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. இந்த ஆண்டு கூடுதலாக 23 அச்சகங்களில் பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி நடந்து வருகிறது. மொத்தத்தில், ஏழரை கோடி பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணிகளை, மார்ச் இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு ஜீவரத்தினம் கூறினார். பாடப் புத்தகங்களை அச்சிட, 100 அச்சகங்கள் தேவை என, பாடநூல் கழகம் எதிர்பார்க்கிறது. எனவே, பாடநூல் கழகம் நிர்ணயித்துள்ள விலைக்கு பாடப் புத்தகங்களை அச்சிட விரும்புபவர்கள், பாட நூல் கழகத்தை அணுகலாம் என்றும், அதிகாரிகள் தெரிவித்தனர். விலை எவ்வளவு? பாடநூல் கழகம் அச்சிடும் பாடப் புத்தகங்களில் பெரும்பகுதி புத்தகங்கள், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பாடப் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டில், முதல் வகுப்பு பாடப்புத்தகங்கள் ஒரு செட், 200 ரூபாய்க்கும், 6ம் வகுப்பு பாடப் புத்தகங்கள் ஒரு செட், 250 ரூபாய்க்கும் வழங்கப்பட்டன. மற்ற வகுப்பு புத்தகங்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. எனினும், கல்வி வாரிய கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியபின், விலை விவரம் தெரிவிக்கப்படும் எனத் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்