குறைவான நிதியால் முடங்கும் மதிய உணவுத் திட்டம்
கடந்த ஆண்டு இந்த திட்டத்திற்கு மொத்தம் ரூ.10380 கோடி ஒதுக்கப்பட்டது. வெறும் 6 கோடியை மட்டுமே கூடுதல் தொகையாக இந்த ஆண்டு ஒதுக்கினால், அது இந்த திட்டத்தை கடுமையாக பாதிக்கும் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் 2011-12 ஆம் ஆண்டில் புதிதாக லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் பள்ளிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த சொற்ப கூடுதல் ஒதுக்கீடு போதாது என்று கூறப்படுகிறது. அதேசமயம் சர்வ சிக்சா அபியான் திட்டத்திற்கு இந்தமுறை ரூ.21000 கோடி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. கடந்தமுறை இந்த திட்டத்திற்கு ரூ.15000 கோடி ஒதுக்கப்பட்டது. மதிய உணவு திட்டமானது கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு முக்கியமான கருவியாக கருதப்படுகிறது. மேலும் கடந்த வருடம் கடும் வறட்சி நிலவியதை தொடர்ந்து, மதிய உணவு திட்டத்திற்கு இந்த வருட கோடையில் அதிக குழந்தைகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதிய உணவு திட்டத்தின் சமையல் செலவானது அத்திட்ட பட்ஜெட்டில் 60% என்ற அளவில் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது 7.5% அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்படுகிறது. எனவே இந்த குறைந்த கூடுதல் தொகை, மதிய உணவு திட்டத்தை கடுமையாக பாதிக்கும் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பழங்குடியின, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாவட்டங்களிலுள்ள அரசு உதவி பெறாத பள்ளிகளுக்கும் இந்த மதிய உணவு திட்டத்தை கொண்டுசெல்ல வேண்டும் என்ற முயற்சி இன்னும் தொடங்கப்படவில்லை. மேலும் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின்கீழ் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை தொடங்கும் ஏற்பாடு தற்போது நாட்டின் 9 மாநிலங்களில் நடைபெற்றுவருகிறது. அதேசமயம் ஏற்கனவே முடிவு செய்தபடி, இந்த திட்டத்தை 20 மாநிலங்களில் நடைமுறைப்படுத்துவதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. அதேசமயம் மதிய உணவு திட்டத்தை 10ம் வகுப்புவரை தொடங்கும் முயற்சியும் தற்போது நிதிப் பிரச்சினையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.