இடைநிலை கல்வி: மதுரை ஆசிரியர்களுக்கு டிச. 14 முதல் பயிற்சி
இந்தியா முழுதும் அனைவரும் துவக்கக் கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவருக்கும் கல்வி (சர்வ சிக்ஷ அபியான்) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த திட்டமாக அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் (ராஷ்டிரிய மத்யமா சிக்ஷா அபியான்- ஆர்.எம்.எஸ்.ஏ.,) இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்காக சென்னையில் மாநிலம் முழுதும் இருந்து அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இதையடுத்து மாவட்ட அளவில் அதிகாரிகள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.நோக்கம்: 12வது ஐந்தாண்டு திட்டம் 2017ம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும். அதற்குள் அனைவருக்கும் இடைநிலை கல்வி (9, 10ம் வகுப்பு) கிடைக்க வேண்டும். அதற்காக 5 கி.மீ.,க்குள் ஒரு உயர்நிலைப் பள்ளி, 7 முதல் 10 கி.மீ.,க்குள் ஒரு மேல்நிலைப் பள்ளி துவங்க வேண்டும்.பொருளாதாரத்தில், கல்வியில் பின்தங்கியோர், பெண்கள், எஸ்.சி.எஸ்.டி., மற்றும் பிற்பட்டோருக்கு தரமான கல்வி அளித்தல் இதன் முக்கிய நோக்கமாகும். இந்நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் இத்திட் டத்திற்கு அதிகார பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மாநில அளவில் இத்திட்டத்திற்கு துணை முதல்வர் தலைவராக செயல்படுவார். அவரின் தலைமையில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் செயல்படுவர். மாவட்ட அளவில் கலெக்டரே இத்திட்டத்தின் தலைவராவார். அவருக்கு கீழ் ரெகுலர் முதன்மை கல்வி அலுவலர் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். அவருக்கு கீழ் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவரும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் ஒருவரும் செயல்படுவர். கல்வி மாவட்ட அளவில் ஒரு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரும், பட்டதாரி ஆசிரியர் ஒருவரும் இத்திட்டத்தை செயல்படுத்துவர். இப்பணியிடங்களில் தற்காலிகமாக ஆசிரியர்கள், அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி மாநிலம் முழுதும் 200 உயர்நிலைப் பள்ளிகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிக்கு ஏற்பாடு செய்யப்படும். 300 பள்ளிகளில் பெரிய அளவில் மராமத்து பணி செய்யப்படும். 2005- 06 கல்வி ஆண்டு முதல் 2009- 10ம் ஆண்டு வரை தரம் உயர்த்தப்பட்ட 300 உயர்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதல் வசதி அளிக்கப்பட உள்ளது.இத்திட்டத்தை மாநிலம் முழுதும் 15 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.மதுரையில் பயிற்சி துவக்கம்: மதுரை மாவட்டத்தில் டிச. 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை ஐந்து இடங்களில் இத்திட்ட பயிற்சி நடத்தப்படும். முதற்கட்டமாக மதுரை கல்வி வட்டத்திற்கு சேது இன்ஜினியரிங் கல்லூரியிலும், மேலூர் கல்வி மாவட்டத்திற்கு கிடாரிப்பட்டி லதாமாதவன் பொறியியற் கல்லூரியிலும், உசிலம்பட்டி கல்வி மாவட்டத்திற்கு திருமங்கலம் பி.கே.என்., பள்ளி வளாகத்திலும் நடைபெற உள்ளது. ஒவ்வொரு மையத்திலும் தலா 120 பேர் வரை முதற்கட்டமாக 360 பேருக்கு இப்பயிற்சி அளிக்கப் படும். இத்திட்டத்திற்கு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.