இரு மாணவிகளுக்கு ஒரு அரசு பள்ளி: 25 லட்சம் ரூபாயில் கூடுதல் கட்டடம்
பந்தலுார்: பந்தலுார் அருகே காவயல் பகுதியில், இரண்டு மாணவிகளுடன் செயல்படும் அரசு பள்ளிக்கு, 25 லட்சம் ரூபாய் செலவில் புதிய பள்ளி கட்டடம் கட்டுவது பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.கூடலுார் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட, பந்தலுார் அருகே காவயல் பகுதியில், கடந்த 1982ல், 5 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழக தொழிலாளர் குழந்தைகள், படிக்கும் வகையில் அரசு துவக்க பள்ளி செயல்பட தொடங்கியது.ஆரம்பத்தில், 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த பள்ளியில் படித்து வந்த நிலையில், தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து படிக்க வைப்பதில் ஏற்பட்ட பெற்றோரின் ஆர்வம், டான்டீ தொழிலாளர்களின் இடம்பெயர்வு போன்ற காரணங்களால், பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை, படிப்படியாக குறைய தொடங்கியது.இந்த பள்ளி கட்டடம் ஓட்டு சாவடி மையமாக உள்ளதால், அரசு நிர்வாகம் இதனை மூடாமல் பெயர் அளவிற்கு செயல்படுத்தி வருகிறது. பள்ளியில் தற்போது நான்கு மற்றும் மூன்றாம் வகுப்புகளில், தலா ஒரு மாணவிகள் வீதம், இரண்டு மாணவிகள் மட்டுமே படித்து வருகின்றனர்.இந்த பள்ளி கட்டடம் நல்ல நிலையில் இருந்தது. அந்த வகுப்பறை கட்டடத்தை இடித்துவிட்டு, கூடலுார் ஊராட்சி ஒன்றியம் சார்பில், பள்ளிக்கு, 25 லட்சம் ரூபாய் செலவில் கூடுதல் கட்டடம் கட்டும் பணி துவக்கப்பட்டு உள்ளது.இப்பகுதி மக்கள் கூறுகையில், இரண்டு மாணவிகள் படிக்கும் பள்ளியை மூடி விட்டு அவர்களை வேறு பள்ளியில் சேர்ப்பதற்கு பதில், நல்ல நிலையில் இருந்த வகுப்பறை கட்டடத்தை இடித்து விட்டு, 25 லட்சம் ரூபாய் செலவில் புதிய வகுப்பறை கட்டப்படுகிறது. இரண்டு மாணவர்களுக்காக ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு சத்துணவு சமையலர் பணியில் உள்ளனர். இவர்களுக்கு சம்பளம் வழங்கும் கல்வி துறையின் நடவடிக்கை அதிருப்தி அளிப்பதாக உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளோம், என்றனர்.ஆய்வு செய்து நடவடிக்கைவட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை கூறுகையில் இங்கு பள்ளி வகுப்பறை கட்டடங்கள் புதிதாக கட்டுவது குறித்த தகவல் தெரியவில்லை. நேரில் ஆய்வு செய்து, இது குறித்து மாற்று நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும், என்றார்.