பள்ளிகளை தெரிந்து கொண்டு மாணவர்களை சேர்க்கணும்
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் உள்ள பள்ளிகள் குறித்த பட்டியலை ஆன்-லைனில் பார்த்து, முழு தகவலையும் தெரிந்து கொண்ட பிறகே, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க பெற்றோர் முன்வர வேண்டும் என, சி.பி.எஸ்.இ. தலைவர் வினீத் ஜோஷி தெரிவித்துள்ளார். கோவை, அமிர்தா பல்கலையில் நற்பண்பு, கலாசார கல்வி குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. முகாமை துவக்கி வைத்த சி.பி.எஸ்.இ., செயலர் மற்றும் தலைவர் வினீத் ஜோஷி நிருபர்களிடம் கூறியதாவது: ஸ்டேட் போர்டு மற்றும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டங்களில் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் ஏற்படக்கூடிய கால இடைவெளியால், மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், புதிதாக பாடங்கள் புகுத்தப்படுகின்றன. மாணவர்களின் படைப்பாற்றல், கற்பனைத் திறனை மேம்படுத்தும் வகையில், அடுத்த கல்வியாண்டில் (2012-13) டிசைனிங் பாடம் அறிமுகப்படுத்தப்படும். கற்பிக்கும் முறைகள் குறித்து வரும் டிசம்பரில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். குறைந்தபட்சமாக 35:1 என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் இருப்பதால், மாணவர்களின் திறனை மேம்படுத்த கூடுதல் கவனம் செலுத்த முடியும். சர்வதேச அளவில் முன்னணியிலுள்ள மொழிகளை கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர அந்தந்த மாநில மொழிகளுக்கும் கவனம் செலுத்தப்படுகிறது. வினாத்தாள் லீக்-அவுட் ஆன சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடக்கிறது. விரைவில், விசாரணை முடிவுகள் தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு சில பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் கற்பிப்பதாக கூறி, ஏமாற்றுவதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். சேர்க்கை முடிந்த பின்னரே தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பது பலருக்கும் தெரிய வருகிறது. எட்டாம் வகுப்பு முடித்த பின்னரே இந்த பாடத்திட்டத்தில் கற்பிப்பது குறிப்பிடத்தக்கது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் உள்ள பள்ளிகள் குறித்த பட்டியல் ஆன்-லைனில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, ஆன்-லைனில் பள்ளிகள் குறித்த தகவலை முழுமையாக தெரிந்து கொண்டு, பின் மாணவர்களை சேர்க்க பெற்றோர் முன்வர வேண்டும். இவ்வாறு வினீத் ஜோஷி தெரிவித்தார்.