உள்ளூர் செய்திகள்

பள்ளி பருவத்திலேயே கலாச்சார கல்வி அவசியம்

கோவை, அமிர்தா பல்கலையில் நற்பண்பு, கலாச்சார கல்வி குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. பல்கலை தாளாளர் அபயாமிர்த சைதன்யா வரவேற்றார். சி.பி.எஸ்.இ.,தலைவர் வினீத் ஜோஷி தலைமை வகித்து பேசியதாவது: இந்தியா விரைவில் வல்லரசாகும் என உலக நாடுகளிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 21ம் நூற்றாண்டிலும் கலாச்சாரத்துக்கு ஏன் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது பலரின் கேள்வியாக உள்ளது. உலகளவில் பிற நாடுகளை விட, இளம் தலைமுறையினர் ஆதிக்கம் செய்யக்கூடிய நாடாக இந்தியா விரைவில் மாறும். வரும் 2025ல் இங்கு 30 வயது உள்ளவர்களே அதிகளவில் இருப்பர்; மற்ற நாடுகளில் இளைஞர் சக்தி குறைவாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது போன்ற சூழலில் இளைஞர்களிடம் நற்பண்புகளை கட்டாயமாக வளர்க்க வேண்டியுள்ளது. மாநிலங்களில் வெவ்வேறு கலாச்சார முறைகள் பின்பற்றப்படாலும், நாகரிகத்தால் பாரம்பரியம் மாறக்கூடாது. கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர வேண்டும். ஒற்றுமையாக இருக்க சீரான வழிமுறைகள் வகுக்க வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் டிவி, மொபைல்போன், இணையதளம் என தொழில்நுட்பங்கள் படிப்படியாக வளர்ந்துள்ளன. அதே வேளையில், மாணவர்கள் அதிகளவில் இவற்றை பயன்படுத்தும்போது பாதை மாறக்கூடிய சூழல் உள்ளது. எனவே, தேசத்தின் முன்னேற்றத்துக்கு கலாச்சார கல்வி மிகவும் அவசியமானது. நற்பண்பு, கலாச்சாரம் குறித்து பள்ளி பருவத்திலேயே கற்பித்தால் மட்டுமே நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்து செல்ல முடியும்; ஊழல் இல்லாத சமுதாயத்தையும் உருவாக்க முடியும். இவ்வாறு, வினீத் ஜோஷி பேசினார். பல்கலை கல்வி இயக்குநர் கணேசன் உட்பட பலர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்