உதவித் தொகையை உயர்த்தியது மத்திய அரசு
எஸ்.டி. மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் போஸ்ட்-மெட்ரிகுலேஷன் படிப்புகள் படிக்க மத்திய அரசு வழங்கி வந்த உதவித் தொகையை உயர்த்தியுள்ளது. பொருளாதாரக் குழுக் கூட்டத்தில், உதவித் தொகை உயர்த்தி வழங்குவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் பி. சிதம்பரம், இந்தியாவில் உள்ள பதிவு செய்யப்பட்ட கல்வி நிலையத்தில் அங்கீகரிக்கப்பட்ட போஸ்ட் மெட்ரிகுலேஷன் படிப்புகளில் சேர்ந்து படிக்கும் எஸ்.டி. மற்றும் உடல் ஊனமுற்ற மாணவர்களுக்கு அளிக்கப்படும் உதவித் தொகை உயர்த்தப்படுகிறது. இது ஜுலை மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது என்றார். நான்கு பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கும் இந்த உதவித் தொகை உயர்வு பொருந்தும். இது மட்டுமல்லாமல் எஸ்.டி. மாணவர்களுக்கு ஆண்டுக் கட்டணம், கல்விச் சுற்றுலாக் கட்டணம், டைப்பிங், பிரிண்டிங் கட்டணம், தொலைதூரக் கல்வி படிப்பிற்கான புத்தகக் கட்டணத்திற்கான உதவித் தொகைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இதேப்போல, பார்வையற்ற மாணவர்களுக்கு படித்துக்காட்டுபவர்களுக்கான கட்டணம், உடல் ஊனமுற்றவர்களுக்கான போக்குவரத்து கட்டணம், அவர்களுக்கு கூட இருந்து உதவி செய்பவர்களுக்கான கட்டணம், மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு பயிற்சி அளிப்பவர்களுக்கான கட்டணத்திற்கும் அளிக்கப்படும் உதவித் தொகைகளும் உயர்த்தப்பட்டுள்ளன.