உள்ளூர் செய்திகள்

புகை, போதையால் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி

இதுகுறித்து நெல்லையில் மன நல மருத்துவர் ஓசார்ட் தொண்டு நிறுவன மருத்துவ ஆலோசகர் சி.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: உலக அளவில் 60 லட்சம் பேர் புகையிலை பொருட்களை பயன்படுத்தி மாரடைப்பு, புற்று நோயால் இறக்கின்றனர். இப்பொருட்களின் பாதிப்பு காரணமாக 6 லட்சம் பேர் இறக்கிறனர். இப்பழக்கத்தை விட்டு விட சுமார் 38 சதவீதம் பேர் விரும்புவதாக புள்ளி விபர தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் இல்லாமல் இப்பழக்கத்தை மக்கள் தொடர்கின்றனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், குழந்தைகள் மத்தியில் ஓசார்ட் தொண்டு நிறுவனம் கடந்த 12 ஆண்டுகளாக போதை, புகை, புகையிலை பழக்கங்களை நிறுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆண்டு தோறும் மக்களை ஒருங்கிணைத்து இதற்கான இயக்கங்கள், கருத்தரங்குகள், அனுபவ பகிர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு முதல் போதை, புகையிலை பழக்கங்களில் இருந்து விடுபட்டவர்களை முன் உதாரணமாக்கி இன்னும் இப்பழக்கங்களில் இருந்து விடுபடாதவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இப்பழக்கங்களில் இருந்து மீண்டோர் பற்றிய விபரங்களை 98429 40144, 96596 93060 என்ற செல்போன் எண்களில் தெரிவிக்கலாம். குறைந்தபட்சம் 3 மாதங்களாவது இப்பழக்கங்களை அவர்கள் தொடராமல் விட்டிருக்க வேண்டும். இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பரிசு அளிப்பதோடு அவர்கள் இப்பழக்கத்திற்கு அடிமையான காரணம், பழக்கத்தால் ஏற்பட்ட உடல், மன நல பாதிப்புகள், பொருளாதார அந்தஸ்து இழப்பு, விடுபட மேற்கொண்ட முயற்சிகள், வெற்றி பெற்ற விதம், பழக்கத்தில் இருந்து விடுபட்ட பின்னர் மாற்றங்கள் ஆகியவற்றை கேட்டறிந்து அவர்களின் அனுபவங்களை எங்கள் மருத்துவ ஆலோசனை குழுவின் அறிவுரைகள் அடங்கிய சிறு கையேடுகளை அச்சிட்டு இப்பழக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். போதை, புகை, புகையிலை பழக்கங்களால் உடல், மன நலக் கேடு, பொருளாதார, சமூக இழப்புக்கு ஆளானோருக்கு ஆலோசனை வழங்க மாதம் தோறும் பகுதி வாரியாக முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும். பெரும்பாலும் மலை பகுதிகளில் சுற்றுலாவின் போது புகை, போதை பழக்கம் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்போது குற்றால சீசனில் புகை, போதை ஒழிப்பு பேனர்களை வைத்தும், பிட் நோட்டீஸ்கள் அச்சடித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பெண்கள், குழந்தைகள், முதியோருக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். தற்போது அதிக அளவில் 25 வயது 35 வயது வரை உள்ளவர்கள் புகை, போதை பழக்கங்களுக்கு ஆளாகின்றனர். பள்ளி, கல்லூரி, விடுதி மாணவ, மாணவிகளும் அதிக அளவில் இப்பழக்கங்களுக்கு ஆட்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக சனிக்கிழமையில் நடக்கும் பார்ட்டி கலாச்சாரத்தால் அதிக அளவில் இப்பழக்கங்களுக்கு ஆளாகின்றனர். ஆரம்பத்தில் ஜாலியாக ஆரம்பிக்கும் இப்பழக்கம் போக, போக அதற்கு அடிமை ஆகும் அளவுக்கு மாறி விடுகிறது. முடிவில் 12 சதவீதம் பேர் போதை அடிமைகளாக மாறி தங்கள் வாழ்க்கையை சீரழித்து கொள்கின்றனர். தற்போது பஞ்சர் ஒட்ட பயன்படுத்தும் சொல்யூசன், டைப்ரைட்டிங் இங்க் எரசர் உட்பட பல்வேறு புதிய, புதிய போதை வஸ்துகளை சிறுவர்கள், மாணவர்கள் பயன்படுத்துவதாக அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுசம்பந்தமாக பெற்றோர்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக அனைத்து தரப்பினரிடையேயும் முழு அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே இப்பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியும். இவ்வாறு மன நல மருத்துவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்