போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி
புத்தகங்களை சுமக்க வேண்டிய வயதில், போதைக்கு அடிமையாகி வருவதால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. அரசு சார்பில், கிராம மற்றும் நகரப்பகுதிகளில் பள்ளிகள் துவக்கப்படுகின்றன. இங்கு படிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களுக்காக, பல லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகின்றன. இந்நிலையில், பள்ளிக்கு வரும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல், தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி வருவது, அனைவரையும் வேதனையடையச் செய்கிறது. பெற்றோரிடம் பள்ளிக்குச் செல்வதாகக் கூறி, புத்தகப் பைகளுடன் கிளம்பும் ஒருசில மாணவர்கள் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், டிமிக்கி கொடுத்து விட்டு, தவறான பாதையில் அடியெடுத்து வைக்கத் தொடங்கியுள்ளனர். இவ்வாறு தவறான பாதையில் தொடங்கும் இவர்களது பயணம் சினிமா, புகைப்பிடித்தல் தொடங்கி, பாட்டில்களுடன் தெருவில் அலையும் நிலைக்கு செல்கிறது. பெற்றோரும் பள்ளிக்கு அனுப்பியதும், தங்களது கடமை முடிந்து விட்டதாக நினைப்பதால், கவனிப்பில்லாத மாணவர்கள் தான்தோன்றித்தனமாக சுற்றித் திரிகின்றனர். ஊருக்கு ஒதுக்குப்புறமாக, கூட்டம் அதிகமில்லாத இடத்திலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகள், இவர்களின் உயர்ந்த இலக்காக உள்ளன. மாணவர்கள் மற்றும் பதினெட்டு வயதுக்குட்பட்டவர்களுக்கு மது, பாக்கு, பீடி, சிகரெட் விற்கக் கூடாது என அரசு தடை செய்துள்ளது. இருப்பினும், விற்பனையில் கிடைக்கும் லாபத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டுள்ள ஒரு சில, டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்கள் மாணவர்கள், போதைக்கு அடிமையாக ஊக்குவிக்கும் வகையில், பாட்டில்களை தாராளமாக விற்பனை செய்கின்றனர்.