உள்ளூர் செய்திகள்

தனித்துறை பல்கலைக்கழக முறைக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு

சென்னை: ‘உயர்கல்வி தரத்தை மேம்படுத்த தனித்துறை பல்கலைக்கழகங்களை (Mono Faculty Universities) ஊக்குவிக்கக்கூடாது’ என, கல்வியாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழகங்கள் வாயிலாக வழங்கப்படும் உயர்கல்வித் தரத்தை மேம்படுத்துவது குறித்த தென்மண்டல  பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கருத்தரங்கு மைசூர் இன்போசிஸ் வளாகத்தில் நடந்தது. இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு, மைசூர் பல்கலைக்கழகம் சார்பில் இரண்டு நாட்கள் கருத்தரங்கு நடந்தது. இதில், கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, புதுவை, கேரளா மாநிலங்களில் உள்ள மத்திய, மாநில, திறந்தநிலை, நிகர்நிலைப் பல்கலைக்கழங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், முன்னாள் துணைவேந்தர்கள் பங்கேற்றனர். பல்கலைக்கழங்களை தரம்உயர்த்துதல், உயர்கல்வியின் தரம், அவை எதிர்நோக்கியுள்ள பிரச்னைகள் குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. கருத்தரங்கில் பேசிய பெரும்பாலான கல்வியாளர்கள் வழக்கமான பாரம்பரிய பல்கலைக்கழக முறையை மேம்படுத்த வேண்டும் என்பதுடன், தனித்துறை பல்கலைக்கழகம் என்ற முறைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அறிவுசார் தகவல் சமூகத்தைக் கட்டமைப்பதில் பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு உறுதுணையாக இருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ‘அதிக எண்ணிக்கையிலான கல்லுõரிகள், பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்படுவது, பல்கலைக்கழகத்தின் கல்வித்தரத்தைப் பாதிக்கும்’ எனக் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. விவாதத்தின் போது,‘அரசு தனித்துறை பல்கலைக்கழகங்கள் தொடர்பான கொள்கை முடிவு எடுக்க வேண்டும். இந்திய அறிவியல் கழகம் (IISc) போன்ற கல்வி நிறுவனங்களை அமைக்கலாம். ஆனால், வேளாண்மை, தோட்டக்கலைத்துறை, இந்தி, சமஸ்கிருதம், கன்னடம், வேதபாடங்கள், தெலுங்கு என தனித்துறை பல்கலைக்கழகங்கள் அமைவதை ஊக்குவிக்கக்கூடாது. வழக்கமான பல்கலைக்கழக முறையில் அரசு மாற்றம் செய்யக்கூடாது. மத்தியப் பல்கலைக்கழகங்களை தனித்துறை சார்பாக விரிவாக்கம் செய்யக்கூடாது. 80 சதவீத பணித்திறன் கொண்டவர்கள் வழக்கமான பல்கலைக்கழங்களில் இருந்தே வெளிவருகின்றனர். இதில் தனித்துறை பல்கலைக்கழகங்களின் பங்களிப்பு வெறும் 20 சதவீதம் மட்டுமே என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். வேகமாக வளரும் பொருளாதார சூழலில், அதிக எண்ணிக்கையிலான பணித்திறன் கொண்டவர்கள் தேவை. இதற்கு வழக்கமான பல்கலைக்கழக முறையே சாலச்சிறந்தது. உயர்கல்வி வளர்ச்சிக்கு, தனித்துறை பல்கலைக்கழக முறை உகந்தது அல்ல. புத்தாக்கத்திறன், படைப்புத்திறனில் மாணவர்களின் அடிப்படை அறிவை மேம்படுத்த வேண்டும். புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்கும் போது, தனித்திறன் பல்கலைக்கழகங்கள் தேவையற்றவை என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். கல்வி மறுசீரமைப்புக் குழுக்களிடம் பலமுறை பரிந்துரைக்கப்பட்ட விஷயம், பல்கலைக்கழகங்களுடன் கல்லுõரிகள் இணைந்திருந்திருப்பது. இது முற்றிலும் தவிர்க்க முடியாது என்றாலும் கூட, அதன் எண்ணிக்கையை வரையறுப்பது அவசியம். 50 கல்லுõரிகள் என்பது போதுமானது. அதேசமயம் 100க்கும் மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த அளவுகோலைத் தளர்த்துவதற்கான தேவை இருப்பினும், வலுவிழக்கச் செய்வதாக இருந்து விடக்கூடாது. கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். ஆய்வு அடிப்படையிலான கற்பித்தலே கல்வித்தரம் குறையாமல் பார்த்துக் கொள்வதற்கான சிறந்த தீர்வாக அமையும். இவ்வாறு கல்வியாளர்கள் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்