அழகப்பா கல்லூரியில் எம்.எஸ்சி., தாவரவியல் படிப்பு
காரைக்குடி அழகப்பா அரசு கலை கல்லூரியில் தாவரவியல் துறையில் இளநிலை படிப்பு மட்டுமே இருந்தது. கடந்த ஜூலை 7ம் தேதி தினமலர் இதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக இக்கல்லூரியில் நடப்பாண்டு முதல் தவாரவியல் துறையில் எம்.எஸ்சி., பாடப்பிரிவு துவங்க அரசு அனுமதித்துள்ளது. இதேபோல், தமிழகம் முழுவதும் 34 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாக இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பாடப்பிரிவுகள் துவங்க வேண்டுமென்றும், தேவையான உதவி பேராசிரியர்களை நியமித்து, நடப்பாண்டு முதலே பாடப்பிரிவுகளை துவங்கப்பட வேண்டுமென, அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, காரைக்குடி அரசு கல்லூரியில் எம்.எஸ்சி., தாவரவியல் முதலாமாண்டு பாடப்பிரிவில் அக்டோபர் 12 முதல் அக்டோபர் 20ம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இதற்காக, நான்கு உதவி பேராசிரியர்கள் பணியிடம் அனுமதிக்கப்பட்டுள்ளது என, கல்லூரி முதல்வர் ரெ. அழகர்சாமி தெரிவித்தார். மேலும், இக்கல்லூரியில் வேதியியல், கணிதம், விலங்கியல், இயற்பியல் மற்றும் வணிகவியல் பாடத்தில் எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புகள் இவ்வாண்டு முதல் துவங்கப்படவுள்ளன என, அவர் தெரிவித்தார்.