முட்டை மூலம் ரத்த தான விழிப்புணர்வு
வில்லியனூர்: முட்டைகளை கொண்டு ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு ஓவியம் உருவாக்கிய, ஒன்றாம் வகுப்பு மாணவனின் சாதனை நிகழ்ச்சி நடந்தது. ஆச்சார்யா கல்வி நிறுவனம் இந்த கல்வியாண்டில் 10 (தனிநபர்) கின்னஸ் சாதனையாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 11வது உலக சாதனையாளராக, ஒன்றாம் வகுப்பு மாணவன் அர்ஜூன் கிருஷ்ண சைதன்யா, கோழி முட்டைகளை அடுக்கி சாதனை படைத்தார். இந்நிகழ்ச்சி, சம்பூர்ணா வித்யாலயா பள்ளி கலையரங்கில் துவங்கியது. 73 ஆயிரத்து 555 முட்டைகளை கொண்டு, 6 மீட்டர் அகலம், 30 மீட்டர் நீளம் கொண்ட மணல் பரப்பில் இடைவிடாமல் அடுக்கி, ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த ஓவியம் அமைந்திருந்தது. அதை தொடர்ந்து, சம்பூர்ணா வித்யாலயாவின் கலையரங்கத்தில், கண்தான விழிப்புணர்வை வலியுறுத்தி, தானிய விதைகளால் உலகிலேயே மிகப் பெரிய ஓவியம் உருவாக்கினர். 7 மீட்டர் உயரமும், 16 மீட்டர் நீளமும் கொண்ட இடத்தில் கொள்ளு, பட்டாணி, வெள்ளை பீன்ஸ் மற்றும் ராஜ்மா என்ற 4 வகையான தானியங்களை உபயோகித்து, இந்த ஓவியம் படைக்கப்பட்டுள்ளது.