கிராமப்புற மருத்துவ சேவைக்கான பிரத்யேகப் படிப்பு?
இந்திய மருத்துவ கவுன்சில்(MCI) இந்த குறுகியகால படிப்பை ஆதரிக்காத நிலையில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் தனிப்பட்ட முயற்சியால், இந்தப் படிப்பு நடைமுறைக்கு வரவுள்ளது. இந்தப் படிப்பை அங்கீகரிக்குமாறு, கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி, மத்திய சுகாதார அமைச்சர் குலாம்நபி ஆசாத், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு 3 வார காலம் அவகாசம் அளித்தார். அதற்குள் MCI ஒரு முடிவுக்கு வரவில்லையெனில், இந்த படிப்பை அங்கீகரிக்கும்படி, சுகாதார அமைச்சகம், மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Bachelor of Rural Medicine(BRM) degreeஎன்று அழைக்கப்படும் இந்தப் படிப்பு, 3.5 வருடங்களைக் கொண்டது. இந்த திட்டம் குறித்து, மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது,, "கிராமப்புறங்களில் குறிப்பிட்ட வருடங்கள் பணியாற்றும்படி, ஊக்கத்தொகை அளித்தாலும்கூட, அங்கு பணியாற்ற மருத்துவர்கள் முன்வருவதில்லை. இதனால், கிராமப்புற மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, இதுபோன்ற ஒரு படிப்பை அறிமுகப்படுத்துவதைத் தவிர, எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் இருந்தால்தான், எந்த மருத்துவப் படிப்பும் சர்வதேச அளவில் அங்கீகாரத்தைப் பெறும். எனவே மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் கோரப்பட்டுள்ளது. அதேசமயம், மருத்துவ கவுன்சில், தன் நிலையில் தொடர்ந்துப் பிடிவாதமாக இருந்தால், அமைச்சகம், தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை இணங்க வைக்கும். இந்த குறுகியகால மருத்துவப் படிப்பானது, அனைத்து மாநிலங்களின் பேராதரவைப் பெற்றுள்ளது. இந்த BRM படிப்பை முடிப்பவர்கள், கிராமப்புற பொது சுகாதார அலுவலர்கள் என்ற நிலையில் இருப்பார்கள். இவர்கள், ஆரம்பநிலை மற்றும் தடுப்புமுறை மருத்துவப் பணியாற்றுவார்கள். அதேசமயம், அவர்கள் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள மாட்டார்கள். இந்தப் படிப்பை முடித்து பணியாற்றுபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் மற்றும் 10 வருட சேவைகளுக்குப் பிறகு, இவர்கள் பொது சுகாதார அலுவலர்களாக பதவி உயர்த்தப்படுவார்கள். கடந்த 2006ம் ஆண்டில், வெறும் 26% மருத்துவர்கள் மட்டுமே, கிராமப்புறங்களில் வாழும் 72% மக்களுக்கு சேவையாற்றினார்கள். இதைத்தவிர, கிராமப்புறத்தில் இருக்கும் மருத்துவர்களைவிட, 4 மடங்கு அதிக மருத்துவர்களும், 3 மடங்கு அதிக செவிலியர்களும் நகர்ப்புறங்களில் இருக்கிறார்கள் என்று மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்த BRM படிப்பு, மத்திய திட்டக் கமிஷனின் உயர்மட்ட நிபுணர் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படிப்பிற்கான கல்லூரியை, 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்ட நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர். மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறையால், கிராமப்புற இந்தியா பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. மருத்துவம் படித்த மற்றும் படிக்கும் மற்றும் படிக்க நினைக்கும் பலரும், அதை பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வாய்ப்பாகவே நினைக்கின்றனர். எனவே, கிராமப்புறங்களுக்கு சென்று சேவை செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைப்பதில்லை. வாய்ப்புக் கிடைத்தால் வெளிநாட்டிற்குப் பறந்து விடுகின்றனர். கிராமப்புறங்களில், 3 வருடங்கள் கட்டாய சேவை செய்ய வேண்டும் என்று முன்பு கொண்டுவர நினைத்த ஒரு திட்டமும், மாணவர்களின் கடும் எதிர்ப்பால் முடங்கியது என்பது நினைவிருக்கலாம்.