பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் இயக்குனர்கள் மாநாடு!
உயர்கல்வித் துறை செயலர் அகர்வால், பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் சுக்தேவ் தோரட் மற்றும் கல்வியாளர்கள் பலரும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிப்பது, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் ஆசிரியர் நியமனம், கல்வி பரிமாற்றம் தொடர்பான சர்வதேச கூட்டுறவு ஒப்பந்தம் போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டன. மாநாட்டை மத்திய மனிதவளத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங் துவக்கி வைத்து பேசுகையில், ‘சிறுபான்மையினருக்கு சிறந்த கல்வி அளிப்பதில் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அத்ற்காக ஒதுக்கப்படும் நிதியை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உயர்கல்வியில் 15 சதவீத மாணவர் சேர்க்கையை அடைவதை குறிக்கோளாக கொள்ள வேண்டும். மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் அதேசமயத்தில் தரமான, உயர்தர கல்வி வழங்குவதில் உள்ள சவால்களை சந்திக்கவும் பல்கலைக்கழகங்கள் தயாராக இருக்க வேண்டும். இதற்கு மனிதவள அமைச்சகம் உறுதுணையாக இருக்கும்‘ என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மத்திய மனிதவளத் துறை இணை அமைச்சர் புரந்தேஸ்வரி மாநாட்டு முடிவுரையாற்றுகையில், ‘வேலைவாய்ப்புகள், சிறந்த கல்வி ஆகியவற்றை வழங்கும் வகையிலான உயர்கல்வி முறையை அளிப்பது மிக முக்கியம்’ என்றார்.