சென்டாக் கவுன்சிலிங் எப்போது? மாணவர்கள் குழப்பம்
சென்டாக் தர வரிசைப் பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்ட முதல்வர் ரங்கசாமி, சென்டாக் கவுன்சிலிங் வரும் 20ம் தேதியன்று (நாளை மறுநாள்) துவங்கும் என அறிவித்து இருந்தார். இந்நிலையில், சென்டாக் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 24ம் தேதியன்று சிறப்பு கவுன்சிலிங் நடக்கும் எனவும், 25ம் தேதியன்று கவுன்சிலிங் துவங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பம் அடைந்துள்ளனர். இதுகுறித்து, சென்டாக் அதிகாரியிடம் கேட்டபோது, "சென்டாக் இணையதளத்தில் கவுன்சிலிங் தேதி குறித்த தகவல் நீக்கப்படும்" என்றார். குழப்பத்துக்கு காரணம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு, மருத்துவக் கவுன்சிலின் அனுமதி உடனடியாக கிடைக்கும்பட்சத்தில் முதல்வர் அறிவித்தபடி 20ம் தேதியன்று கவுன்சிலிங்கை துவக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மருத்துவக் கவுன்சில் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் 24ம் தேதியன்று கவுன்சிலிங்கை துவக்குவது எனவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இருந்தபோதும், மாணவ மாணவிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை போக்கும் வகையில், முன்கூட்டியே கவுன்சிலிங் தேதி குறித்து தெளிவான, அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாகும்.