சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்க உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பித்து, பயன் பெறலாம் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் ராஜேஸ் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் வாழும் மதவழி சிறுபான்மையினரான கிறித்துவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் பிரிவை சேர்ந்த தொழில் மற்றும் தொழில்நுட்பக் கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளின் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2014-15ம் ஆண்டுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க, புதிதாக விண்ணப்பிக்கும் மக்களுக்கு வரும் செப்டம்பர் 30ம் தேதியும், புதுப்பித்தலுக்கு நவம்பர் 15ம் தேதி வரை காலவரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டுக்கு 2,279 மாணவர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசால் 2014-15ம் ஆண்டுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இக்கல்வி உதவி தொகையை பெற விரும்பும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள், கடந்த ஆண்டு பொது தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் அனைத்து வகையிலும் 2 லட்ச ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் பதிவு செய்யப்பட்ட அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கையொப்பமிட்டு, அத்துடன் மதிப்பெண் சான்றிதழ், சாதி மற்றும் வருமான சான்றிதழ் ஆகியவற்றின், நகலுடன், கல்விக்கட்டணம் செலுத்திய ரசீது, இருப்பிட முகவரி, வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்களுக்கான ஆவணங்களை இணைத்து, அவர்கள் படிக்கும் கல்வி நிலையங்களில் செப்டம்பர் 10ம் தேதிக்கு புதியதற்கும், நவம்பர் 11ம் தேதிக்குள் புதுப்பித்தலுக்கும் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ, மாணவிகளின் வங்கி கணக்குகளில் கல்வித்தொகை செலுத்தப்பட உள்ளதால், கல்வி உதவி தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போது வங்கி கணக்கு விவரங்களையும் தவறாது சமர்ப்பிக்க வேண்டும். மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்ட கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் செலுத்தும், முழுக்கல்வி கட்டணங்களும் மீள வழங்கப்படும். ஏனைய கல்வி நிறுவனங்களில் விடுதியில் தங்கி படிப்பவருக்கு 30 ஆயிரம் ரூபாய் மற்றும் விடுதியில் தங்காமல் படிப்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை அதிகபட்சமாக கல்வி உதவித்தொகை வழங்கப்படும். கல்வி நிலையங்களில் ஆன்லைன் மூலம் மாணவ, மாணவிகளால் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை அவ்வப்போது பரிசீலித்து தகுதி பெற்ற விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பரிந்துரை செய்ய வேண்டும். மேலும், விண்ணப்ப படிவங்களிலும் கையொப்பமிட்டு அத்துடன் அனைத்து சான்று ஆவணங்களையும் அக்டோபர் 20ம் தேதிக்குள் புதியதற்கும், நவம்பர் 25ம் தேதிக்குள் புதுப்பித்தலுக்கும், "சிறுபான்மையினர் நல ஆணையர், 807, அண்ணா சாலை, சென்னை-2" என்ற, முகவரிக்கு அனுப்ப வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லாத விண்ணப்பங்கள், கால தாமதமாக வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும், என்றார்.