தொழிலாளர் குடியிருப்பில் செயல்படும் அரசு துவக்கப்பள்ளி
பந்தலூர்: சேரம்பாடியில் பள்ளிகட்டடம் மற்றும் நிரந்தர ஆசிரியர்கள் இல்லாமல், தொழிலாளர் குடியிருப்பில் ஓரே அறையில் ஒரு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் 1954ம் ஆண்டு முதல் தேயிலை தோட்ட வேலைகளுக்கு கர்நாடக மாநிலத்திலிருந்து அதிகளவில் தொழிலாளர்கள் கொண்டுவரப்பட்டனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு, குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தியதுடன், குழந்தைகள் படிக்க கன்னட வழிப்பள்ளி கூடங்கள், சேரம்பாடி கண்ணம்பள்ளி, கோல்ஸ்லேண்ட் மற்றும் நடுவட்டம் பகுதிகளில் செயல்பட துவங்கின. அதில் 1967ம் ஆண்டு தொழிலாளர் குடியிருப்பில் துவக்கப்பட்ட கோல்ஸ்லேண்ட் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கன்னட வழியில் படித்து வந்தனர். ஆனால் உயர் கல்விக்கு இங்கு வழியில்லாத காரணத்தால், மாணவர்கள் தமிழ் வழிக்கல்விக்கு மாறினர். இதனால் கடந்த 2012-13ம் கல்வியாண்டில் 3 மாணவர்களுடன் செயல்பட்ட இப்பள்ளி மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 2013-14ம் கல்வியாண்டில் இந்த பள்ளிக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் தமிழ் வழிக்கல்வி துவக்கப்பட்டது. தனியார் தோட்ட நிர்வாகத்தின் தொழிலாளர் குடியிருப்பின் ஒரு அறையில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை செயல்பட்டு வரும் நிலையில் தற்போது 16 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு தனியாக அரசு ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையில், சேரம்பாடி அரசுத்துவக்கபள்ளி ஆசிரியர்கள் மாற்று பணியில் நியமிக்கப்பட்டு பாடம் நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், புத்துயிர் பெற்ற இப்பள்ளி மீண்டும் மூடுவிழாவை நோக்கி சென்று விடுமோ என்ற அச்சம் பெற்றோர் மத்தியில் அதிகரித்துள்ளது. அதேவேளையில், இப்பகுதியில் இருந்து பிற பள்ளிக்கு குழந்தைகள் செல்வதிலும் பெரும் சிக்கல்கள் உள்ளன. இது குறித்து உதவி தொடக்க கல்வி அலுவலர் பொன்தன்ராஜ் கூறுகையில், "கன்னட வழி மாணவர்கள் இல்லாத நிலையில், இப்பள்ளியில் தமிழ் வழியில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். கன்னட வழியை, தமிழ் வழியாக மாற்றிட பள்ளி கல்வி இயக்குனருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு கிடைத்த பின்னர், நிரதந்த அரசு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்" என்றார்.