உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான வசதிகள்: களமிறங்கும் யு.ஜி.சி.

2015ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான வசதிகளை, கல்வி நிறுவனங்களில் அமைத்துக் கொடுக்க வேண்டுமென, மாற்றுத் திறனாளிகளுக்கான முதன்மை கமிஷனருக்கு, மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையடுத்து, யு.ஜி.சி. இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது, ஒவ்வொரு காலகட்டத்திற்கும் கொண்டுவரப்படும் புதிய புதிய கொள்கைகளால், உயர்கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும்  GDA (General development assistance grant) எனப்படும் பொது மேம்பாட்டு உதவி நிதியிலிருந்து, ரூ.1 லட்சம் மேற்கண்ட நோக்கத்திற்காக செலவிடப்பட வேண்டுமென யு.ஜி.சி. முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பான உண்மை நிலவர அறிக்கை, 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்படலாம். ஒரு பல்கலையில், பிரெய்லி வசதி, பேசும் புத்தகங்கள், குறியீட்டு மொழி விளக்கவுரையாளர்கள் போன்ற வசதிகள் இருக்க வேண்டும். ஆனால், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான முழுமையான வசதிகள் என்பவை இன்னும் நிறைவேறாத கனவாகவே உள்ளன. மாற்றுத்திறன் தொடர்பான படிப்புகள் துறை, ஒவ்வொரு மத்தியப் பல்கலையிலும் ஏற்படுத்தப்பட வேண்டும் மற்றும் ஒவ்வொரு மாநிலத்திலும், குறைந்தபட்சம் ஒரு மாநிலப் பல்கலையிலாவது ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது. இத்துறையின் மூலம், மாற்றுத்திறனாளிகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சிக்கல்கள், குறிப்பாக, மனித உரிமைகள், மறுவாழ்வு மற்றும் கல்வி தொடர்பான பிரச்சினைகள் கவனம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்