மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை எப்போது?
கோவை: கோவை சிங்காநல்லுார் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.,) பிரதிநிதிகள் ஆய்வு மேற்கொண்டனர். இ.எஸ்.ஐ., கழகத்தின் சார்பில், 2009ம் ஆண்டு, கோவை வரதராஜபுரத்தில் 520 கோடி ரூபாய் மதிப்பில், மருத்துவக் கல்லுாரி கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன. பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தாண்டு மாணவர் சேர்க்கை துவங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை மாணவர் சேர்க்கை குறித்த எவ்வித அறிவிப்பும் இல்லாததால், இந்தாண்டும் மருத்துவக் கல்லுாரி துவங்குவது கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், நேற்று கோவை வந்த இந்திய மருத்துவ கவுன்சில் பிரதிநிதிகள், மருத்துவக் கல்லுாரியின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தனர். இ.எஸ்.ஐ., மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், "மருத்துவக் கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கான தகுதிச் சான்றிதழுக்காக, இந்திய மருத்துவக் கவுன்சில் உறுப்பினர்கள் மார்ச் மாதம் நடத்திய ஆய்வின்போது, கட்டுமான பணிகளில் ஒருசில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர். அதற்கேற்ப, மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாகவே தற்போதைய ஆய்வு நடக்கிறது. மருத்துவமனையில் நோயாளிகளுக்கும், மருத்துவ மாணவர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்; தொடர்ந்து ஆய்வு நடக்கிறது. ஆய்வின் முடிவுக்கு பின், மருத்துவக் கல்லுாரிக்கான அனுமதி குறித்து தெரியவரும்" என்றனர்.