இன்ஜி., கல்லூரியில்மின்சாரம் பாய்ந்து மாணவர் பலி
படாளம்: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு சொந்தமானதாக கூறப்படும், இன்ஜினியரிங் கல்லுாரியில், மின்சாரம் தாக்கி, மாணவர் இறந்தார். காஞ்சிபுரம் மாவட்டம், படாளம் அடுத்த, மாமண்டூர் அருகே உள்ளது, ஆண்டாள் அழகர் இன்ஜினியரிங் கல்லுாரி. விஜயகாந்திற்கு சொந்தமானதாக கூறப்படும் இந்த கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு இயந்திரவியல் படித்து வந்தவர் சிவசுப்ரமணியன், 21. திருச்சி அருகே உள்ள பெரம்பலுாரைச் சேர்ந்த இவர், அந்தக் கல்லுாரி விடுதியில் தங்கி, படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, கல்லுாரியில், விடுதி நாள் விழா நடந்துள்ளது. அதற்காக, மாணவர்கள், மின் விளக்கு அலங்காரம் செய்ததாக தெரிகிறது. அப்போது, தரையில் கிடந்த மின் ஒயரை, மாணவர் சிவசுப்ரமணியன், மரக் கம்பால் எடுக்க முயன்றுள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்து, மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி மாணவர் இறந்தார். அவரின் தந்தை சீராளன் அளித்த புகாரின் படி, படாளம் போலீசார், விசாரித்து வருகின்றனர்.