அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு
சங்கராபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இதையொட்டி கடந்த 14ம் தேதி முதல் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை துவங்கி நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கால் பலர் வருமானமின்றி வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனால், தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.மேலும் அரசு பள்ளிகளில் இலவச கல்வி, இலவச சீருடை, பாட புத்தகங்கள், முட்டையுடன் கூடிய சத்துணவு வழங்கப்படுவதால் சங்கராபுரம் பகுதியில் தனியார் பள்ளியில் இருந்து, தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் அரசு பள்ளியில் சேர்க்கின்றனர். இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.