உள்ளூர் செய்திகள்

அருகாமை பள்ளி முறை அமல்படுத்த தீர்மானம்

தமிழகத்தில், சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்துவது தொடர்பாக விவாதிக்க, சமக்கல்வி மக்கள் இயக்கத்தின் ஆலோசனை கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இயக்க அமைப்பாளர்களான மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, கல்வியாளர் ராஜகோபாலன் மற்றும் உறுப்பினர்கள் பலர் பங்கேற்று பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: * தமிழக அரசு, சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்துவதாக இருந்தால், இப்போது கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும். அதற்கு பதில், சட்டசபையில் இலவச, தரமான, சமச்சீர் கல்வியை அடைய புதிய மசோதாவை அறிமுகப்படுத்த வேண்டும். * முன்பருவ குழந்தை பராமரிப்பு (6 வயது வரை), வளர்ச்சி மற்றும் கற்றலுக்கான உரிமை உள்ளிட்ட 18 வயது வரையுள்ள அனைவருக்கும் இலவச கட்டாய, தரமான, சமமான கல்விக்கான உரிமையை நிறைவேற்ற ஒரு முழுமையான சட்டத்தை இயற்ற வேண்டும். * குழந்தைகளின் இலவச, கட்டாயக் கல்வி உரிமைக்கான சட்டத்தில், குறைந்தபட்ச தர நிர்ணயங்கள் கூட இந்த அவசர சட்டத்தில் இடம்பெறவில்லை. நடைமுறையில் உள்ள பல்வேறு விதமான பள்ளிக் கல்வி முறையை நீக்கிவிட்டு, ஒரே விதமான ஒரு மாநில கல்வி வாரியத்தை அறிமுகப்படுத்த வேண்டும். அனைத்து பள்ளிகளையும் இந்த நிர்வாக அமைப்பின் கீழ் கொண்டு வந்து, குழந்தைகளின் தேவைக்கேற்ப கல்வியை வழங்க வேண்டும். * அருகாமை பள்ளி கொள்கையோடு கூடிய, பொதுப்பள்ளி முறையை அமல்படுத்த வேண்டும். கல்வி, தனியார் வர்த்தகத்திற்கு திறந்துவிடப்பட மாட்டாது என்ற நிலையை, அரசு எவ்வளவு விரைந்து உருவாக்க முடியுமோ, அவ்வளவு விரைந்து உருவாக்க வேண்டும். லாபம் ஈட்டும் வர்த்தக மையமாக எந்த பள்ளியும் செயல்பட அனுமதிக்கக் கூடாது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அரசுப்பள்ளிகள் மற்றும் உள்ளாட்சி பள்ளிகள் மட்டுமே இயங்க முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். * தற்போதுள்ள இட ஒதுக்கீட்டு முறை அனைத்து பள்ளிகளிலும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவை, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்