தன்னாட்சி கல்லுாரிகளுக்கு புது கட்டுப்பாடு:அண்ணா பல்கலை
அண்ணா பல்கலையின் இணைப்புடன், தன்னாட்சி அந்தஸ்து பெற்ற இன்ஜினியரிங் மற்றும், ஆர்கிடெக்ட் கல்லுாரிகள், தாங்களே பாடத்திட்டம் அமைத்தும், தேர்வு நடத்தியும் செயல்படுகின்றன.இந்த கல்லுாரிகளில் விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க, புதிய விதிகளை உருவாக்க பல்கலை முடிவு செய்தது. இதுகுறித்து சில மாதங்களுக்கு முன் அண்ணா பல்கலையின் சிண்டிகேட் குழுவில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் புதிய சட்ட விதிகளாக உருவாக்கப்பட்டு உள்ளன. அவை விரைவில் அமலுக்கு வருகின்றன.அவற்றின் விபரம்:* தொடர்ச்சியாக குறைந்தபட்சம், 10 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்ட கல்லுாரிகளுக்கு, தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்படும்.* 10 ஆண்டுகளுக்கு மேல் நடத்தப்படும் பாடப்பிரிவுகளின் ஆசிரியர்களுக்கு, அதே கல்லுாரியில், குறைந்தபட்சம், 5 ஆண்டு பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.* ஐந்து கல்வி ஆண்டுகளில் தொடர்ச்சியாக, இளநிலை முதலாம் ஆண்டில், குறைந்தபட்சம், 70 சதவீத இடங்களில், மாணவர் சேர்க்கை நடந்திருக்க வேண்டும்.* யு.ஜி.சி., என்ற பல்கலை மானிய குழுவின் நிபந்தனைகளின்படி, ஆசிரியர், மாணவர் விகிதம் பின்பற்றப்பட வேண்டும்.* தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, குறைந்தபட்சம், 10 ஆண்டு அனுபவம் உள்ள, முழுநேர பேராசிரியராக இருக்க வேண்டும்.* தேர்வு மதிப்பீட்டு குழுவில், பேராசிரியர் அல்லது இணை பேராசிரியர் உறுப்பினராக இருக்க வேண்டும். செமஸ்டர் தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், அதன் புள்ளி விபரங்களை ஒரு மாதத்துக்குள், அண்ணா பல்கலைக்கு அனுப்ப வேண்டும்.* தேர்வு தொடர்பான மாணவர்களின் ஆவணங்களை, தேர்வு முடிவு வெளியாகும் நாளில் இருந்து, நான்கு ஆண்டுகள் வரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.* பல்கலை சார்பில் ஆய்வு செய்ய நேரிட்டால், அதை தாக்கல் செய்ய வேண்டும்.* இதுபோன்ற கட்டுப்பாடுகளை மீறினால், தன்னாட்சி அந்தஸ்து ரத்து செய்யப்படும்.சூழலுக்கு ஏற்ப ஏற்கனவே உள்ள மாணவர்கள், அதே கல்லுாரியில் படிக்கவோ அல்லது வேறு கல்லுாரிக்கு மாற்றப்படவோ நடவடிக்கை எடுக்கப்படும். இந்த புதிய கட்டுப்பாடுகளுக்கு, சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுஉள்ளது.