உள்ளூர் செய்திகள்

பார்வை குறைபாடுடைய மாணவர் அமெரிக்காவில் ஆராய்ச்சி

மதுரை மஞ்சணக்காரத் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகன் சத்யபிரகாஷ் (29). இவர் பிறவியிலேயே இரு கண்களும் பார்வை குறைபாடுடையவர். தியாகராஜர் மாடல் மேல்நிலை பள்ளியில் 1999 ல், பிளஸ் 2 வில் சைக்காலஜியில் மாநில அளவில் முதலிடம் பெற்றவர். அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ., கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் எம்.ஏ., சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.எஸ்.சி., (அலைடு சைக்காலஜி) படித்தவர். இவர் தற்போது அமெரிக்க டெக்சாஸ் பல்கலையில் பி.எச்.டி., (ஆட்டிசம்) படித்து வருகிறார். மதுரை விஸ்வநாதபுரம் ரோட்டரி ஹெலன் கெல்லர் பேசும் புத்தக நிலையத்தில் பார்வையற்றோர்களுடன் கலந்துரையாடல் நடந்தது. பின் சத்யபிரகாஷ் கூறியதாவது: நான் சென்னை மாநிலக் கல்லூரியில் படித்த போது ஆட்டிசம் பற்றி ஆராய்ச்சி செய்ய முடிவு செய்தேன். ரோட்டரி ஹெலன்கெல்லர் பேசும் புத்தக நிலையம் மூலம் பயிற்சி பெற்று ஜி.ஆர்.இ., மற்றும் டோபல் தேர்வு எழுதினேன். இதன் மூலம் கலிபோர்னியா சாந்தா கிளாரா பல்கலையில் எம்.ஏ., (கவுன்சிலிங் சைக்காலஜி) படித்தேன். அமெரிக்க பார்வை குறைபாடு உள்ளோர் படிக்கும், பேசும் நூலகத்தில் பயிற்சி பெற்றேன். தற்போது அமெரிக்க டெக்சாஸ் பல்கலையில் பி.எச்.டி., ஆட்டிசம் படிக்கிறேன்.   ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மொழித்திறன், மாறுபட்ட நடவடிக்கைள், பிற குழந்தைகளுடன் சேராமல் தனிமை குறைபாடுகள் இருக்கும். இதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. எத்தைகய ஜீன்களால் ஏற்படுகிறது என ஆராய்ச்சி நடக்கிறது. ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் ஆராய்ச்சி மற்றும் மறுவாழ்வு மையம் மதுரையில் துவக்குவதே எனது லட்சியம், என்றார். ராமதாஸ், குழந்தை ஊனமாக இருக்கிறதே? என அவர்களை முடக்கி வைக்கக்கூடாது. கல்வியில் ஊக்குவிக்க வேண்டும் என்றார். ரோட்டரி ஹெலன் ஹெல்லர் பேசும் புத்தக நிலைய இயக்குனர் நிக்கோலஸ் பிரான்சிஸ், பார்வை குறைபாடுடைய 45 பேர் படித்து, தற்போது பல பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர். சாதிக்க வேண்டும் என்ற வெறி இருக்க வேண்டும் என்றார். தியாகராஜர் மாடல் பள்ளி ஆசிரியர் சங்கர் பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்