கலாம் பற்றிய நூல்: வெளியிடுகிறார் அமித்ஷா
சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரையை துவக்கி வைக்க, இன்று ராமேஸ்வரம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாளை, மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டிற்கு செல்கிறார்.அங்கு கலாம் குடும்பத்தினரை சந்தித்து பேசும் அமித்ஷா, அவர் வீட்டை சுற்றி பார்க்கிறார். பின், ராமேஸ்வரம் தனியார் ஓட்டலில் நடக்கும், கலாம் நினைவுகள் ஒரு நாளும் மறையாது என்ற நுாலை வெளியிடுகிறார். அறிவியல் அறிஞர் ஒய்.எஸ்.ராஜன் மற்றும் கலாம் சகோதரரின் மகள் டாக்டர் நசீமா மரைக்காயர் இருவரும் இணைந்து எழுதி உள்ளனர். இந்த நுாலை, அமித்ஷா வெளியிட்டால் தான் சிறப்பாக இருக்கும் என கலாம் குடும்பத்தினர் விரும்பியுள்ளனர். அந்த தகவல் அறிந்து, உடனே விழாவுக்கு வர ஒப்புக் கொண்டுள்ளார் அமித்ஷா. நுால் வெளியீட்டு விழாவில், அண்ணாமலையும் பங்கேற்கிறார். அண்ணாமலை பாதயாத்திரை துவக்க விழாவில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பங்கேற்பார் என, அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.