உள்ளூர் செய்திகள்

கோவை ஓவியருக்கு பிரதமர் மோடி பாராட்டு

மன் கி பாத் எனும் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம், பாரத பிரதமர் நரேந்திரமோடி, ஒவ்வொரு மாதமும், பொதுமக்களுடன் பேசி வருகிறார். இந்நிகழ்ச்சியில் சமூகத்தின் முக்கிய பிரச்னைகள், அதற்கான தீர்வுகள், நாடு முழுவதும் பல்வேறு துறை சார்ந்த சாதனையார்கள், சிறந்த கண்டுபிடிப்புகளை பாராட்டி வருகிறார். அந்தவரிசையில், ஜூலை மாதத்திற்கான நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கோவை வடவள்ளி அடுத்த பி.என்.,புதுாரை சேர்ந்த சூழலியல் ஓவியர் சுரேஷ் ராகவனை பாராட்டி பேசியுள்ளார்.பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பேசுகையில், சூழலியல், தாவரவியல், விலங்கியல், உயிர் பன்முகத்தன்மை போன்ற வார்த்தைகளை கேட்கும் போது, சிலர் நிபுணர்கள் தொடர்பான பாடங்கள், சிறப்பு பாடங்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால், நமது சிறு முயற்சியால் கூட, சூழலை காக்க முடியும் என, தமிழகத்தின், வடவள்ளி சேர்ந்த ஓவியர் சுரேஷ் ராகவன் நிரூபித்துள்ளார். ஓவியக்கலை மூலம், அழிவின் விளிம்பில் உள்ள பறவைகள், விலங்குகள், தாவரங்களை வரைந்து ஆவணப்படுத்தி வருகிறார். கலை மூலம் இயற்கைக்கு சேவை செய்வது அற்புதமானது, என்றார்.இதுகுறித்து ஓவியம் சுரேஷ்ராகவன் கூறுகையில், தினமலர் நாளிதழில், என் ஓவியம் குறித்த செய்தி வெளியான பிறகே, நிறைய அழைப்புகள் வந்தன. மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும், 30 வகை பறவைகள், 46 விலங்குகள், 138 வகையான ஆர்க்கிட் தாவரங்களை, அதன் நிறம், அளவு முதற்கொண்டு, துல்லியமாக வரைந்து ஆவணப்படுத்தியுள்ளேன். இதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க விரும்புகிறேன். பிரதமர் மோடி அவர்கள், என்னைப்பற்றி பேசுவார் என எதிர்பார்க்கவே இல்லை. நண்பர் என என்னை குறிப்பிட்டு, என் பணிகளுக்கு அங்கீகாரம் வழங்கி பேசியுள்ளார். பிரதமரின் பாராட்டு வார்த்தைகள் என்னை மேலும் இத்துறையில் உற்சாகமாக ஈடுபட வைத்துள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்