மன அழுத்தம் குறைய யோகா பயிற்சி
கோவை: பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், தலைமை ஆசிரியர்களின் மனதை ஒருநிலைப்படுத்தவும், மன அழுத்தத்தை தவிர்க்கவும் தலைமை ஆசிரியர்களுக்கு யோகாசன பயிற்சி அளிக்கப்படுகிறது. கோவை புனித மைக்கேல் பள்ளியில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான நிர்வாகவியல் பயிற்சி, நேற்று நிறைவு பெற்றது. பயிற்சியின் ஒரு பகுதியாக நேற்று காலை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் யோகாசனப் பயிற்சி அளிக்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற இது போன்ற நிர்வாக பயிற்சி முகாமில் பங்கேற்ற கருத்தாளர்கள் கவுதமன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் இது பற்றி கூறியதாவது: ஒரு பள்ளியின் அனைத்து நடவடிக்கைகளும் பள்ளி தலைமை ஆசிரியரை சார்ந்துதான் உள்ளது. வேலைப்பளு மற்றும் இதர பிரச்னைகளால் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் சில தலைமை ஆசிரியர்கள் கடும் மன அழுத்தத்தால் தவிக்கின்றனர். அனைத்து ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களும் தினமும் காலை யோகாசனம் செய்வதால் இது போன்ற மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். இப்பயிற்சி பெறும் தலைமை ஆசிரியர்கள், தாங்கள் சார்ந்துள்ள பள்ளியின் ஆசிரியர்களுக்கு கற்றுக் கொடுப்பர். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பர். இதன் மூலம் மாணவர்கள் கவனம் சிதறாமல் படிப்பில் முழுக்கவனத்தையும் செலுத்த முடியும். தேர்வில் அதிக மதிப்பெண் பெற இப்பயிற்சி உதவும். மாணவர்களின் ஒழுங்கீன செயல்கள் குறையும். இவ்வாறு, கருத்தாளர்கள் கூறினர். பயிற்சி அளித்த மனவளக்கலை மன்ற மண்டல ஒருங்கிணைப்பாளர் சுசீலா, சிறு கதைகள் மூலம் மாணவர்களை ஆசிரியர்கள் வசியப்படுத்துவது எப்படி என்பது பற்றி விளக்கினார்.