வேளாண் பல்கலையில் பொங்கல் விழா கோலாகலம்
பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கோவை வேளாண் பல்கலையில் நடந்த பொங்கல் விழாவில், தமிழர் பண்பாடு, கலாச்சாரத்தை ஒட்டிய விளையாட்டு நிகழ்ச்சிகள் களைகட்டின. விழாவையொட்டி, பல்கலையில் உள்ள மாடுகள் அதிகாலையிலேயே குளிப்பாட்டப்பட்டு கொம்புகளுக்கு வண்ணம் தீட்டப்பட்டன. பண்ணை மகளிர் மாடுகளுக்கு திலகமிட்டு பலூன்கள், வண்ணக் காகிதங்களால் அலங்கரித்தனர். பல்கலை வேளாண் இயந்திரங்கள், கருவிகள் சுத்தம் செய்யப்பட்டன. பல்கலையின் மத்திய பண்ணை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாவை, பயிர் இனப் பெருக்கம், தோட்டக்கலை, மண் மற்றும் பயிர் மேலாண்மை துறையினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். காலை 8.00 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சியில் அலங்காரம் செய்யப்பட்ட 10 மாடுகளுக்கு பல்கலை அருகில் உள்ள மாதேஸ்வரன் கோவிலில் பூஜை செய்யப்பட்டது. அதன் பின் பண்ணை மகளிர் ‘பொங்கலோ பொங்கல்’ என உற்சாகமாக கோஷம் எழுப்ப, கிராமத்து பெண்களின் குலவை ஒலி முழங்க பொங்கல் வைக்கப்பட்டது. கோவிலில் இருந்து திரும்பிய மாடுகளுக்கு துணைவேந்தர் முருகேசபூபதி சர்க்கரைப் பொங்கல், பழங்கள் அளித்து மரியாதை செய்தார். பண்ணைத் தொழிலாளர்கள், வாகன ஓட்டுனர்களுக்கு வேட்டி, துண்டுகள் வழங்கி மரியாதை செய்தார். இதன் பின் பட்டி மிதித்தல் நிகழ்ச்சி நடந்தது. பட்டியில் நிரப்பப்பட்டிருந்த பல்வேறு தானியங்களை பண்ணை மாடுகள் மிதித்துச் சென்றன. இதன் பின் பண்ணைத் தொழிலாளர்கள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகளில் கயிறு இழுக்கும் போட்டி, மியூசிக்கல் சேர், ஸ்லோ சைக்கிள் ரேஸ் போட்டிகள் பெருத்த ஆரவாரத்துடன் நடந்தன. விழாவில் பாதுகாப்பு அலுவலர்கள் அணி சார்பில் நடந்த சிலம்பாட்டம் அனைவரையும் கவர்ந்தது. விளையாட்டுப் போட்டிகள்: ஆண்களுக்கான நூறு மீட்டர் ஓட்டப்பந்தயம் போட்டியில் ஜெயபால், பண்ணை மகளிருக்கான சிந்தாமல் தண்ணீர் குடம் சுமக்கும் போட்டியில் மகேஸ்வரி, கயிறு இழுக்கும் போட்டியில் பாலமுருகன் அணி, கரண்டியில் எலுமிச்சம் பழம் ஏந்தி நடக்கும் போட்டியில் பரிமளா தேவி, ஓட்டுனர்களுக்கான நூறு மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டியில் கோவிந்தராஜ், ஸ்லோ சைக்கிள் போட்டியில் செல்வராஜ், உளி அடிக்கும் போட்டியில் சுப்ரமணியன் ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு துணைவேந்தர் முருகேசபூபதி பரிசுகள் வழங்கினார். நிறைவு விழாவில் துணைவேந்தர் பேசுகையில், “1990 முதல் பண்ணைத் தொழிலாளர்கள் பல்வேறு கட்டங்களில் பணி நிரந்தரம் செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 2,500க்கு மேற்பட்ட பண்ணைத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 15 ஆண்டுகள் பணிபுரிந்த 950 பண்ணைத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். அடுத்த கட்டமாக, 10 ஆண்டுகள் பணி புரிந்தவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு, பண்ணைத் தொழிலாளர்களின் நலனுக்காக பல்கலை சார்பில் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது,” என்றார். பல்கலை பதிவாளர் சுப்பையன், மேலாண்மை குழு உறுப்பினர் அன்பு, பண்ணைத் தொழிலாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் திரளாக பங்கேற்றனர்.