தலைமை இல்லாமல் தள்ளாடும் அரசு பாலிடெக்னிக்குகள்
மதுரை: தமிழகத்தில் உள்ள பல அரசு பாலிடெக்னிக்குகள் முதல்வர்கள், துறைத் தலைவர்கள் இல்லாமல் செயல்படுவதாக தொழில்நுட்ப துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் 18 அரசு பாலிடெக்னிக்குகள் உள்ளன. இவற்றுடன் தோல், கெமிக்கல், பிரின்டிங், டெக்ஸ்டைல் போன்றவற்றிற்கென சிறப்பு நிறுவனங்கள் என மொத்தம் 22 பாலிடெக்னிக்குகள் உள்ளன. இந்த பாலிடெக்னிக்குகள் அனைத்தும் தலைமை இல்லாமல் தள்ளாடுகின்றன. மொத்தமுள்ள 22ல் சென்னை, மற்றும் தோல் தொடர்பான பாலிடெக்னிக் ஆகிய இரண்டை தவிர மீதியுள்ள 20 பாலிடெக்னிக்குகள் முதல்வர்கள் இல்லாமல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுகின்றன. முதல்வர்களாக துறைத் தலைவர்களை பதவி உயர்வு செய்து நியமிக்கலாம். ஆனால், மொத்தமுள்ள 80 துறைத் தலைமையிடங்களில் 20 பேர்தான் உள்ளனர். மற்ற இடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை மூத்த விரிவுரையாளர்களை வைத்து நிரப்ப வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன் சீனியர் விரிவுரையாளர்கள் குறித்த பட்டியல் தயாராகியும், நடவடிக்கை இல்லை. முதல்வர்களும், துறைத் தலைவர்களும் இல்லாமல் அப்பணியிடங்கள் அனைத்தும் ‘பொறுப்பு’ ஆசிரியர்களால் கவனிக்கப்படுகின்றன. முக்கிய பதவியிடங்களில் ‘ரெகுலர்’ அலுவலர்கள் இல்லாததால் நிர்வாகம் ஸ்தம்பித்து போய்விடுகிறது. தவறு செய்யும் மாணவர், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. பாலிடெக்னிக்குகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை முறையாக செலவிட முடியாது. பல கல்லூரிகளின் வளாகங்கள் புதர்மண்டி கவனிப்பாரற்ற நிலையில் உள்ளன. இதுதவிர பல்வேறு ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. பாலிடெக்னிக்கை பொறுத்தவரை ஒரு முதல்வர், ஒரு துறைக்கு தலைவர், ஒரு மூத்த விரிவுரையாளர், இரண்டு விரிவுரையாளர்கள், ஐந்து இன்ஸ்ட்ரக்டர்கள் தேவை. தமிழக அளவில் 400 இன்ஸ்ட்ரக்டர்கள் இருந்தனர். இப்பணியிடம் பி.இ., படித்தோரை கொண்டு நிரப்பப்பட்டது. கடந்த சம்பள கமிஷனில் விரிவுரையாளர் பணியிடத்தை பி.இ., படித்தோரை கொண்டு நிரப்ப சிபாரிசு செய்யப்பட்டது. இதனால் இன்ஸ்ட்ரக்டர் பணியிடம் நிரப்புவது கைவிடப்பட்டது. இதற்கிடையே பாலிடெக்னிக்குகளில் கம்ப்யூட்டர் உட்பட புதிய படிப்புகள் துவக்கப்பட்டன. ‘ஷிப்டு’ முறையும் அமல்படுத்தப்பட்டது. இவ்வாறு பணிகள் இரட்டிப்பாகியும் புதிய பணியிடம் எதுவும் வழங்கவில்லை. எனவே, தற்காலிக ஆசிரியர்களை அதிகபட்சமாக 4000 ரூபாய் சம்பளத்தில் நியமித்தனர். இந்த ஆசிரியர்களை ரெகுலர் ஆசிரியர்களைப் போல கற்பித்தல் தவிர பிற பணிகளில் ஈடுபடுத்த முடியாததால், கல்லூரிகளில் பல பணிகள் முடங்குகின்றன. இதுதவிர நூலகர், உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்களும் பல இடங்களில் காலியாகவே உள்ளன. தொழில்நுட்ப கல்வியை நிர்ணயிக்க தனி இயக்குனரகம் இருந்தும், இவ்வளவு அவலங்கள் உள்ளன. அரசு பாலிடெக்னிக் ஆசிரியர்கள் சங்க தலைவர் எஸ்.கணேசன் கூறுகையில், “பாலிடெக்னிக்குகளில் காலிப் பணியிடங்களை உடனே நிரப்பாவிட்டால், மாணவர்களின் கல்வி பாதிக்கும்” என்றார்.