ஆண்டுமுழுவதும் நடைபெற உள்ள ‘கேட்’ தேர்வு
மேலாண்மை கல்வி படிக்க விரும்புபவர்கள் எழுதும் பிரதான தேர்வான ‘காமன் அட்மிஷன் டெஸ்ட்’ (கேட்) தற்போது ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் நடத்தப்படுகிறது. ஐ.ஐ.எம்., போன்ற உயர் மேலாண்மை கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் மாணவர்கள் இத்தேர்வை அவசியம் எழுத வேண்டும். இவ்வாறு ஆண்டுதோறும் நாடுமுழுவதிலும் ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர். கடந்தாண்டு முதல் ஆன்லைன் மூலம் கேட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், மாணவர் விரும்பும் ஆண்டின் எந்தநாளிலும், எத்தனை முறை வேண்டுமானாலும் இத்தேர்வை எழுதும் வகையில் தேர்வு முறையை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ஐ.ஐ.எம்., அகமதாபாத் கேட் ஒருங்கிணைப்பாளர் சதீஷ் தியோடர் கூறுகையில், “கேட் தேர்வை ஆண்டுமுழுவதிலும் நடத்த கேள்வி வங்கி தான் முதல் தேவையாக உள்ளது. இது நிறைவடைந்தபின், மாணவர்கள் ஆண்டின் எந்த நாளிலும் இத்தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர்” என்றார். கடந்த ஆண்டே இம்முறையை அமல்படுத்த திட்டமிடப்பட்ட நிலையில், வினாக்கள் பற்றாக்குறையில் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனினும், 2011ம் ஆண்டு முதல் அல்லது அதிகபட்சம் மூன்று ஆண்டுகளில் இத்திட்டத்தை அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.