ஜப்பானுக்கு புறப்பட்ட அரசு பள்ளி மாணவி
சின்னாளபட்டி: சிறார் குறும்பட போட்டியில் வெற்றி பெற்ற திண்டுக்கல் மாவட்டம் அ.குரும்பபட்டி அரசு பள்ளி மாணவி கீர்த்தனா இன்று (நவ., 3) சென்னையிலிருந்து ஜப்பான் புறப்படுகிறார்.அரசு பள்ளி மாணவர்களின் கல்வி சாரா செயல்பாடுகளாக 6 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு இலக்கிய மன்றம், சிறார் குறும்படம், வானவில் மன்றம், வினா- விடை சார்ந்த போட்டிகள் பள்ளி, ஒன்றிய, மாவட்ட, மற்றும் மாநில அளவில் நடத்தப்படுகிறது.சிறார் குறும்படங்களை பொறுத்தவரை தனி நபர், குழு உள்ளிட்ட 7 பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன. திரைப்படத்தின் ஒரு காட்சியை இயக்குதல் என்ற தனிநபர் பிரிவில் ஆத்துார் ஒன்றியம் அ.குரும்பபட்டி நடுநிலைப் பள்ளியில் கடந்தாண்டு 7ம் வகுப்பு படித்த மாணவி கீர்த்தனா மாநில இறுதிப்போட்டியில் பங்கேற்றார். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 14 பேர் கொண்ட இவரது குழுவிற்கு முதலிடம் கிடைத்தது.முன்னதாக கல்விச் சுற்றுலாவாக அமெரிக்கா அழைத்து செல்வதாக அரசு அறிவித்தது. பாஸ்போர்ட், விசா தயாரான போதும் பள்ளிக் கல்வித்துறை தாமதப்படுத்தியது. இதையடுத்து அமெரிக்க செல்வது மாற்றப்பட்டு ஜப்பானுக்கு இன்று சென்னையிலிருந்து மாணவி புறப்பட ஏற்பாடுகள் நடந்தது. தொடர்ந்து நேற்று மாணவி தன் குடும்பத்தினருடன் சென்னை சென்றார்.கீர்த்தனா கூறியதாவது: மாவட்ட அளவில் தேர்வாகி கடந்தாண்டு சென்னையில் பயிற்சி முகாம் நடந்தது. முன்னணி இயக்குனர்கள் பயிற்சியளித்தனர். 14 பேர் கொண்ட குழு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட நகருக்கு செல்லயிருந்தது.பிளஸ் 2விற்குப்பின் அரசு திரைப்படக் கல்லுாரியில் இயக்குனர் பிரிவில் பட்டம் படித்து திரைத்துறை இயக்க நுட்பங்களில் புதுமையை புகுத்துவதை இலக்காக கொண்டுள்ளேன். தற்போது, ஜப்பான் அழைத்துச் செல்கின்றனர் என்றார்.