உள்ளூர் செய்திகள்

கல்விக்கடனுக்கு ஆன்லைன் விண்ணப்பம் மாணவர்களுக்கு பயிற்சி

உடுமலை: கல்விக்கடன் பெற ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிப்பது குறித்து, மாணவர்களுக்கான பயிற்சி முகாம், நத்தக்காடையூர் பில்டர்ஸ் இன்ஜினியரிங் கல்லுாரியில் இன்று நடக்கிறது.பிளஸ் 2 படித்த பின், மாணவ, மாணவியர் கலை, அறிவியல், இன்ஜி., மருத்துவம் என பல்வேறு பாடப்பிரிவுகளை தேர்வு செய்து, உயர்கல்வி கற்கின்றனர். கல்லுாரிக்கு, கல்வி கட்டணம், போக்குவரத்து, தங்கும் விடுதி, உணவு கட்டணங்கள் செலுத்த வேண்டியுள்ளது.பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச்சேர்ந்த மாணவர்களும், தடையின்றி உயர்கல்வி கற்க வசதியாக, வங்கிகள் வாயிலாக கல்விக்கடன் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.மாணவர்களின் உயர் கல்விக்கு, நான்கு லட்சம் ரூபாய் வரை பிணையமின்றி கல்விக்கடன் பெறலாம். இதற்கு, மாணவர்கள், vidhyalakshmi.co.in என்கிற இணையதளத்தில், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அருகில் உள்ள வங்கியை அணுகி ஆன்லைனில் பூர்த்தி செய்த விண்ணப்ப நகலுடன், உரிய ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.அதன்படி, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி (கனரா) சார்பில், கல்விக்கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், காங்கயம் அருகே நத்தக்காடையூர் பில்டர்ஸ் இன்ஜி., கல்லுாரியில் கல்விக்கடன் பயிற்சி முகாம், இன்று நடத்தப்படுகிறது.முகாமில், வங்கியாளர்கள் பங்கேற்று கல்விக்கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கின்றனர். மாணவர்கள் உரிய கல்வி சான்றுகளுடன் முகாமில் பங்கேற்க வேண்டும்.திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரவி கூறியதாவது: கல்விக்கடன் பெற விரும்பும் கல்லுாரி மாணவர்களுக்கு, வித்யாலட்சுமி போர்ட்டலில் விண்ணப்பிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு கல்லுாரியைச்சேர்ந்த இரண்டு மாணவர்களுக்கு, கல்விக் கடனுக்கு விண்ணப்பிப்பது குறித்து முகாமில் முழுமையாக பயிற்சி அளிக்கப்படும்.அம்மாணவர்கள் கல்லுாரியில் பயிலும் மற்ற மாணவர்களுக்கு, கல்விக்கடன் பெற விண்ணப்பிப்பது குறித்து பயிற்சி அளிப்பர். இதனால், அனைத்து மாணவர் மத்தியிலும் கல்விக்கடன் பெறுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படும். எளிதாக விண்ணப்பித்து, கடன் பெற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்