சுய வேலைவாய்ப்பு பயிற்சி முடித்தோருக்கு சான்றிதழ்
செங்கல்பட்டு: ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், போட்டோகிராபி பயிற்சி பெற்றவர்களுக்கு, நேற்று சான்றிதழ் வழங்கப்பட்டது.செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் கிராமத்தில், இந்தியன் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தில், சுய தொழில் துவங்க, இரு பாலருக்குமான இலவச தொழிற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இந்த பயிற்சி முடித்தோருக்கு, மத்திய - மாநில அரசுகளின் கடன் திட்டங்களில், மானியம் வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, போட்டோகிராபி, வீடியோகிராபிக்கான ஒரு மாத பயிற்சி, 35 பேருக்கு அளிக்கப்பட்டது.பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, புதிய கலெக்டர் வளாகத்தில், காஞ்சிபுரம் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் ராஜாராமன் தலைமையில், நேற்று நடந்தது.இதில், நபார்டு வங்கி மேலாளர் விஜய் பங்கேற்று, பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். மகளிர் திட்ட இயக்குனர் மணி, முன்னோடி வங்கி மேலாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.