மகளிர் தொழில் முனைவோரை கண்டறியும் முகாம்
ஊட்டி: உயர்தர தொழில்சார் சேவைகளை வழங்க தகுதியான மகளிர் தொழில் முனைவோரை கண்டறியும் முகாம் நடக்கிறது.கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:நீலகிரியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், 35 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய மற்றும் ஏற்கனவே தொழில் செய்து வரும் தொழில் முனைவோருக்கு தேவையான தொழில் பதிவு, திட்டம் தயார் செய்தல், வங்கிக்கடன் பெற்று தருதல் ஆகிய அடிப்படை தொழில் சேவைகளை, மதி சிறகுகள் தொழில் மையம் மூலம், ஊரக புத்தாக்க திட்டம் வழங்கி வருகிறது.மாவட்டத்தில் தகுதியான மகளிர், தொழில் முனைவோர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்யும் முகாம் வரும், 17ல் மாவட்ட மேலாண்மை அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் சார்பில் நடக்கிறது.எனவே, தொழில் நிறுவனங்களை துவக்க ஆர்வமும், திறமையும் உடைய புதிய மகளிர் தொழில் முனைவோர்களும், ஏற்கனவே தொழில் நிறுவனங்களை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி அடுத்தக்கட்ட வளர்ச்சியை எதிர்நோக்கி காத்திருக்கும் மகளிர் தொழில் முனைவோர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.மேலும் விபரங்களுக்கு, வாழ்ந்து காட்டுவோம் திட்டம், பி-பிளாக், முதல் தளம், கூடுதல் கலெக்டர் அலுவலகம், பிங்கர் போஸ்ட், ஊட்டி என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.