தாய் இறுதிச்சடங்கை முடித்து தேர்வெழுதிய மாணவர்
விருதுநகர்: விருதுநகர் மீசலுாரில் இறந்த தாய்க்கு இறுதி சடங்கை முடித்து விட்டு 9ம் வகுப்பு மாணவன் ரமேஷ்கிருஷ்ணா பள்ளியில் சமூக அறிவியல் தேர்வெழுதினார்.விருதுநகர் மீசலுாரை சேர்ந்த லட்சுமணன் மகன் ரமேஷ்கிருஷ்ணா 14. மீசலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். தந்தை லட்சுமணன் 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக பாதிப்பால் இறந்தார். இந்நிலையில் தாய் இந்திரா 56, நுாறு நாள் வேலைக்கு சென்று மகனை படிக்க வைத்து வந்தார். ரமேஷ் கிருஷ்ணாவுக்கு பிளஸ் 1 படிக்கும் மகாலட்சுமி 16, என்ற அக்காவும் உள்ளார். இந்திரா உடலில் உப்புச் சத்து அதிகமாக இருக்கிறது என சிகிச்சை பெற்று வந்தார்.சிகிச்சை முடிந்து 15 நாட்கள் முன் வீட்டிற்கு வந்தவருக்கு உப்பு சத்து குறைந்து கால் வீங்கி வந்ததாக மீண்டும் சிகிச்சை பெற விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சென்றார். உள்நோயாளியாக சிகிச்சை பெற்ற நிலையில் தேர்வு நாளன்று காலையில் அவர் இறந்தார்.இதையடுத்து லட்சுமணன் தாயின் இறுதி சடங்கை முடித்து விட்டு மதியம் 1:00 மணிக்கு மீசலுார் பள்ளியில் சமூக அறிவியல் ஆண்டு இறுதி தேர்வை எழுதினார். தாய், தந்தையை இழந்த நிலையில் தளராது தேர்வெழுதிய மாணவரை ஆசிரியர்கள் ஆறுதல்படுத்தினர். ரமேஷ் கிருஷ்ணா, அக்கா மகாலட்சுமி உறவினர் பாதுகாப்பில் உள்ளனர்.