உபரி ஆசிரியர்கள் என்பது பொய் கணக்கு
சென்னை: ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக, பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து, வகுப்புக்கு குறைந்தது ஒரு ஆசிரியரை நியமிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில், தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், தேவைக்கும் கூடுதலாக, 2,236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி இயக்குனர் கூறியிருப்பது, நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில், தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 6,587 நடுநிலைப் பள்ளிகள் என, மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டுமே.இந்த பள்ளிகளில், வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட, மொத்தம் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால், 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான்.இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை, ஒரு லட்சத்துக்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2,236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக, 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில், புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.அரசு பள்ளிகளில், கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து, வகுப்புக்கு குறைந்தது ஒரு ஆசிரியரை நியமிக்க, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.