அரசு பள்ளிகளின் தேர்ச்சி தலைகுனிய வைத்துள்ளது
புதுச்சேரி: புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவின் பின்னடைவு, அரசின் செயல்படாத தன்மையை காட்டுகிறது என, எதிர்கட்சி தலைவர் சிவா கூறியுள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரியில் முன்பு இருந்த ஆட்சியாளர்கள் கல்வி தரத்தை உயர்த்த அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தினர். நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு ஒரு லட்சம் பணக்கொடை அளித்து தேர்வு முடிவை உயர்த்தினர்.ஆனால் கடந்த 3 ஆண்டுகால தேர்வு முடிவுகள் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக மாறியுள்ளது. பத்தாம் வகுப்பில் அரசு பள்ளி மாணவர்கள் 78.08 சதவீத தேர்ச்சி தலை குனிய வைத்துள்ளது.இது சென்ற ஆண்டை விட 2.75 சதவீதம் குறைவு. நுாறு சதவீத தேர்ச்சி பெற்ற 108 பள்ளிகளில் அரசு பள்ளிகள் வெறும் 8 மட்டுமே. காரைக்கால் மாவட்டம் மிகவும் பின்தங்கி 65.31 சதவீத தேர்ச்சி என்பது அரசின் அடிப்படை கட்டமைப்பில் விரிசல் இருப்பதை காட்டுகிறது.பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்ற 55 பள்ளிகளில், ஒரே ஒரு அரசு பள்ளி நுாறு சதவீத தேர்ச்சி பெற்றது. தேர்ச்சி சதவீதம் குறைந்தால், உயர்கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும். இதை தடுக்க போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாநிலம் முழுதும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது என, கூறியும் அரசு செவிசாய்க்கவில்லை. அரசு, இனியாவது கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.