கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம்: பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
சென்னை: கவுரவ விரிவுரையாளர்களுக்கு, மே மாதம் சம்பளம் கிடையாது என்பது, இயற்கை நியதிக்கு முரணான செயல் என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.அவரது அறிக்கை:பல்கலை மானியக் குழு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் 57,000 ரூபாய் சம்பளம், 12 மாதங்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதை தி.மு.க., அரசு செயல்படுத்தவில்லை.இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை செயல்படுத்த, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், கல்லுாரிக் கல்வி ஆணையர், வழக்கு தொடர்ந்தவர்களுக்கு, கடிதம் எழுதி உள்ளார்.அதில், பல்கலை மானியக்குழு பரிந்துரையின்படி, கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படவில்லை எனக்கூறி, 12 மாதங்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என தெரிவித்துள்ளார்.இது பல்கலை மானியக் குழுவின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கும், நீதிமன்ற உத்தரவுக்கும் எதிரானது. பல்கலை மானியக்குழு பரிந்துரையின்படி, கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படவில்லை எனக்கூறி, மே மாத சம்பளம் வழங்க இயலாது என தெரிவிப்பது பொருத்தமற்றது.கொடுப்பது குறைந்த சம்பளம். அதுவும் ஒரு மாதத்திற்கு கிடையாது என தெரிவிப்பது, இயற்கை நியதிக்கு முரணான செயலாகும்.முதல்வர் இதில் தலையிட்டு, கவுரவ விரிவுரையாளர்களுக்கான மே மாத சம்பளத்தை வழங்கவும், பல்கலை மானியக்குழு பரிந்துரையின்படி ஊதியம் வழங்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.