மாணவர்களால் நிரம்பிய மதுரை புத்தகத் திருவிழா
மதுரை: மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் (பபாசி), பொது நுாலக இயக்ககம், பள்ளிக் கல்வித்துறை சார்பில் புத்தகத் திருவிழா செப். 15 வரை நடக்கிறது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட அரங்கில், 231 ஸ்டால்களில் லட்சக்கணக்கான புத்தகங்கள் குவிந்துள்ளன.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்குமான புத்தகங்கள் கொட்டிக் கிடக்கின்றன. குறிப்பாக, மாணவர்கள் படிக்கும் வகையில் குட்டி குட்டி காமிக்ஸ் புத்தகங்கள், திரில்லர், சிறுவர் இலக்கியம், பொது அறிவு, தன்னம்பிக்கை புத்தகங்கள் ஏராளம் குவிந்துள்ளன. 10 சதவீத தள்ளுபடியுடன் பள்ளி மாணவர்களுக்கு 5 சதவீதம் கூடுதல் தள்ளுபடி என்பதால் அவற்றை தேடிச் சென்று வாங்கி மகிழ்ந்தனர்.தினமும் காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை ஸ்டால்களை பார்வையிடலாம். அனுமதி இலவசம். வார நாட்களில் மாலை 4:00 முதல் 6:00 மணி வரை பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.தினமும் மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை எழுத்தாளர்கள், கவிஞர்கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோரின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம் நடைபெறுகிறது.