பழங்குடி இளைஞர்களுக்கு பயிற்சி நிறைவில் வேலை
கோவை: கோவை, மத்திய வேளாண் பொறியியல் நிறுவனத்தில் நடந்த பயிற்சியை நிறைவு செய்த பழங்குடி இளைஞர்கள், வளாகத் தேர்வு வாயிலாக பல்வேறு நிறுவனங்களில், பணி நியமனம் பெற்றுள்ளனர்.மத்திய வேளாண் பொறியியல் நிறுவனத்தில், தமிழக அரசின் பழங்குடியினர் நலத்துறை நிதி உதவியுடன், வேளாண் கருவிகள் பழுதுபார்ப்பு தொடர்பான, ஒரு மாத திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.அனைத்துவித வேளாண் கருவிகளை பழுது நீக்கும் பயிற்சி, தென்னை மரம் ஏறும் கருவி, டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி தெளிப்பு, டிராக்டர் இயக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். இந்த அடிப்படையில், 25 பழங்குடியின இளைஞர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டது.பயிற்சி நிறைவாக, வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. வேளாண் கருவி உற்பத்தி நிறுவனங்கள், சொட்டுநீர் பாசன நிறுவனங்கள், மதிப்பூட்டு கருவி தொழிற்சாலைகள், டிரோன் நிறுவனம் என, 8 நிறுவனங்கள் பங்கேற்றன.பயிற்சியை முடித்தவர்கள், கோவை, சென்னை, பெங்களூரு, கிருஷ்ணகிரி நகரங்களில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டனர். பயிற்சி பெற்ற 25 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை, ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ்செல்வன் செய்திருந்தார்.