உள்ளூர் செய்திகள்

மக்கள் தொடர்பு அதிகாரியாக ஆக வேண்டுமா?

ஒரு நிறுவனத்தின் மீது ஏதேனும் அதிருப்தி இருந்தால், அது சரிசெய்யப்பட வேண்டும். இதுபோன்று மக்களின் குறையை நிவர்த்தி செய்து, நிறுவனத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, அதன் மதிப்பை உயர்த்த ஆலோசனை வழங்குபவர்தான் மக்கள் தொடர்பு அதிகாரி. மக்கள் தொடர்பு அதிகாரியின்(பப்ளிக் ரிலேஷன் ஆபிசர்) பணிகள்: ஒரு மக்கள் தொடர்பு அதிகாரிக்கு, சிறந்த தகவல் தொடர்பு திறன், பகுப்பாய்வு மற்றும் அமைப்பாக்க திறன்கள், சுருக்கமாக எழுதும் திறன், நடப்பு நிகழ்வுகளின் மீதான ஆர்வம் மற்றும் நெருக்கடிகளின் கீழ் வேலை செய்யும் பக்குவம், டைப்பிங் மற்றும் கணிப்பொறி அறிவு போன்ற பல திறமைகள் இருக்க வேண்டும். அவரின் பலவித பணிகள் பின்வருமாறு: *நிறுவனத்தைப் பற்றிய பொதுமக்களின் கருத்தை அறிவது * கொள்கை முடிவுகள் மற்றும் தகவல் தொடர்பு வியூகங்களில் நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்குதல் * மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடுதல் * நிறுவனத்தின் சார்பாக அரசாங்கம் மற்றும் பிற நிறுவனங்களுடன் லாபியிசம் மற்றும் விவாதங்களை மேற்கொள்ளுதல். * நிறுவனத்திற்கும், மீடியாவிற்கும் பாலமாக செயல்படுதல். அந்த செயல்பாட்டில், விசாரணைகளுக்கு பதிலளித்தல், மீடியா துறையினருடன் இன்டர்வியூ ஏற்பாடு செய்தல், மீடியா வெளியீடுகளை தயார் செய்தல் மற்றும் அறிக்கைகளை தயாரித்தல். * செய்தி மடல்கள், துண்டு பிரசுரங்கள் மற்றும் விவரக்குறிப்புகளை எழுதுதல் மற்றும் திருத்துதல். * வருடாந்திர அறிக்கைகள், நிறுவனத்தைப் பற்றிய விவர அறிக்கை போன்ற ஆவணங்கள் தயாரித்தலில் உதவுதல். * உரைகளை எழுதுதல், காட்சிப்பட மற்றும் ஒலிப்பட அம்சங்களை தயார் செய்தல் மற்றும் இணையதளத்தை நிர்வகித்தல். * கண்காட்சிகள் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல் * உள்ளார்ந்த தகவல் தொடர்பு, வொர்க் ஷாப் மற்றும் மீடியா பயிற்சி போன்றவை சம்பந்தமான படிப்புகளை நடத்துதல். * தகவல் தொடர்பு நடவடிக்கைகளை மதிப்பிடுதல் மற்றும் எதிர்கால நடவடிக்கைகளை பரிந்துரைத்தல * பதிவேடுகள் மற்றும் கோப்புகளை பராமரித்தல் * இவையெல்லாவற்றையும் விட, நிறுவனத்திற்கு ஏதேனும் சட்டரீதியான, பொருளாதார ரீதியான மற்றும் நிர்வாக ரீதியான நெருக்கடிகள் வரும்போது சிறப்பாக செயல்பட்டு, நிறுவனத்தை பாதுகாப்பதே மக்கள் தொடர்பு அதிகாரியின் தலையாயப் பணி. வேலை வாய்ப்புகள்: அரசு மற்றும் தனியார்துறை நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள், ஹோட்டல்கள், விமான நிறுவனங்கள், தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் செய்தித்தாள் நிறுவனங்கள் உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்களில் மக்கள் தொடர்பு அதிகாரிக்கான பணி வாய்ப்புகள் உள்ளன. வருமான வாய்ப்புகள்: ஆரம்ப நிலையில் ஒரு மக்கள் தொடர்பு அதிகாரி ரூ.6000 முதல் 10000 வரை பெறுகிறார். அதேசமயம் சம்பள விகிதமானது நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுகிறது. இத்துறையில் நல்ல அனுபவம் பெற்று, மூத்த அதிகாரியாக பணிபுரியும் நிலை ஏற்படும்போது சம்பளம் ரூ.20000 முதல் 30000 வரை கிடைக்கும். பொதுவாக ஆங்கிலம் உள்ளிட்ட சில வெளிநாட்டு மொழிகள் தெரிந்து, பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் மக்கள் தொடர்பு அதிகாரிகள் பெறும் சம்பளமே தனி. மக்கள் தொடர்பு சம்பந்தமான படிப்புகள்: மக்கள் தொடர்பு சம்பந்தமான பல படிப்புகள், பட்டப்படிப்பை முடித்தபிறகு படிக்கும் வகையில் உள்ளன. மீடியா சம்பந்தமான படிப்புகளும் உதவியாக இருக்கும். தமிழ்நாட்டில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் மக்கள் தொடர்புத்துறை சம்பந்தமான படிப்பை நடத்துகிறது. அண்டை மாநிலமான கேரளத்தில் கொச்சின் பல்கலைக்கழகமும், ஆந்திராவின் திருப்பதியிலுள்ள ஸ்ரீ பத்மாவதி மகிலா விஷ்வவித்யாலயம் கல்வி நிலையமும், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகமும் இதுசம்பந்தமான படிப்புகளை நடத்துகின்றன. மேலும் டெல்லியின் பல கல்வி நிறுவனங்களும் இதுசம்பந்தமான படிப்புகளை நடத்துகின்றன.        


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்