சத்துணவு அமைப்பாளர்களுக்கு சிறப்பு போட்டி தேர்வு
சென்னை: ‘சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களில், பட்டதாரி ஆசிரியர் தகுதி வாய்ந்தவர்களுக்கு, வரும் 20ம் தேதி சிறப்புத் தேர்வு நடத்தப்படும்’ என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களில், பட்டதாரி ஆசிரியர் தகுதி வாய்ந்தவர்களுக்கு, கடந்த நவம்பர் 21ம் தேதி சிறப்பு போட்டி எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. ஆனால், மொத்த பணியிடங்களுக்கான எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டதால், தேர்வை தள்ளி வைத்து, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. முதலில், 341 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுவதாக, வாரியம் அறிவித்தது. ஆனால், நேற்றைய அறிவிப்பில், எத்தனை பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது என்ற விவரத்தை வெளியிடவில்லை. மாறாக, வரும் 20ம் தேதி சிறப்பு போட்டி எழுத்துத் தேர்வு, சென்னையில் நடைபெறும் என்றும், தகுதி வாய்ந்தவர்களுக்கு, ‘ஹால் டிக்கெட்’ அனுப்பப்பட்டு வருகிறது என்றும் வாரியம் அறிவித்துள்ளது.