உள்ளூர் செய்திகள்

வருமானத்தை காக்க ஆஸ்திரேலிய பல்கலைகள் மும்முரம்

மெல்போர்ன்: இந்தியா மற்றும் சீனாவிலிருந்து வரும் மாணவர்களுக்கான விசா கெடுபிடிகளை தளர்த்தும்படி, ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள், அந்நாட்டு அரசை கேட்டுக்கொண்டுள்ளன. உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட முதல் 2 நாடுகளான இந்தியாவும், சீனாவும் அதிகளவு மாணவர்களை ஆஸ்திரேலியாவிற்கு வழங்குகின்றன. ஆனால் தற்போதைய பிரச்சினைகளால், இந்திய மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்ததை அடுத்து, ஆஸ்திரேலியாவின் பல சுயநிதி பல்கலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. ஆஸ்திரேலியாவின் குடியேற்ற மற்றும் குடியுரிமை துறையானது, சமீபத்தில், இந்தியா மற்றும் பிற 37 நாடுகளுக்கான விசா நடைமுறைகளை ஓரளவு தளர்த்தியிருந்தாலும், ஆஸ்திரேலிய பல்கலைகளின் கூட்டமைப்பானது, அந்த நடைமுறைகளை இன்னும் தளர்த்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் வந்து படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு தேவைப்படும் ஆங்கில புலமை மற்றும் நிதி தேவைகள் ஆகியவற்றை அளவிடுவதற்கான செயல்முறையில் மாற்றம் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இந்த விஷயங்களில் கடினமான நடைமுறைகள் பின்பற்றப்படுவதால், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து மாணவர்களை ஈர்ப்பதில் சிக்கல் நிலவுகிறது. இதனால் கல்வி வருமானம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த கோரிக்கை விடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்