உள்ளூர் செய்திகள்

சத்துணவின் தரம் குறித்து பரிசோதனை: 10 இடங்களில் மாதிரிகள் சேகரிப்பு

சில தினங்களுக்கு முன், தமிழகம் நெய்வேலியில் உள்ள பள்ளியில், மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்த சம்பவங்களைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பள்ளி, அங்கன்வாடி மையங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், உணவு பாதுகாப்புத் துறையினரும், தமிழகம் முழுவதும் பள்ளி, அங்கன்வாடி சத்துணவு மையங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இதன்படி, சென்னையில் உள்ள பள்ளி, அங்கன்வாடி சத்துணவு மையங்களில், ஒரு வாரத்திற்கு மேலாக, உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதுவரை, 350க்கும் மேற்பட்ட பள்ளி, அங்கன் வாடி மையங்களில் ஆய்வு நடந்துள்ளது. உணவு மாதிரிகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் லட்சுமிநாராயணன் கூறியதாவது: ஒரு வாரத்தில் சென்னையில், 10 மையங்களில், சமைத்த உணவு மாதிரி; சமையலுக்கு பயன்படும் அரிசி, பருப்பு, எண்ணெய் மாதிரி என, இரண்டு விதமான மாதிரிகள் எடுத்துள்ளோம். மொத்தம், 20 மாதிரிகள் எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். இந்த முடிவுகள் ஒரு வாரத்திற்குள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்