தேசிய வில்வித்தை போட்டியில் பங்கேற்க 10 திருப்பூர் மாணவர்கள் தகுதி
திருப்பூர்: வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் தேசிய வில் வித்தை போட்டியில், தமிழக அணி சார்பில் விளையாட, திருப்பூரை சேர்ந்த 10 மாணவ, மாணவியர் தகுதி பெற்றுள்ளனர். நாமக்கல்லில் உள்ள நவோதயா பள்ளியில், மாநில அளவிலான வில் வித்தை போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு பீல்டு வில் வித்தை சங்கம் சார்பில் நடந்த அப்போட்டியில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்ட வில் வித்தை கழகம் சார்பில் பங்கேற்ற 16 மாணவ, மாணவியரில், 10 பேர் வெற்றி பெற்றனர். இவர்கள், வரும் டிசம்பர் மாதம் திருச்சியில் நடைபெற உள்ள தேசிய வில் வித்தை போட்டியில், தமிழகம் சார்பில் பங்கேற்க உள்ளனர்.வெற்றி பெற்றவர்கள்: 10 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் பிரிவில், அபிஜித் ராஜா தங்கம் வென்றார்; மாணவியர் பேர் ரிக்கர்வ் பிரிவில், பிரதீக்ஷாவுக்கு தங்கம் கிடைத்தது. 14 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் ரிக்கர்வ் பிரிவில், சிவசங்கரன் வெண்கலம் வென்றார்; பேர் ரிக்கர்வ் பிரிவில், மகேஷ் குமாருக்கு வெண்கலம் கிடைத்தது. 14 வயதுக்கு உட்பட்ட மாணவியர் ரிக்கர்வ் பிரிவில், நித்யசௌந்தர்யா தங்கம் வென்றார்; பேர் ரிக்கர்வ் பிரிவில், சிவப்ரியாவுக்கு தங்கம் கிடைத்தது. காம்பவுண்ட் பிரிவில், ரித்திக் ஷமீருக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது; இதே பிரிவில், வருண் வெள்ளி பதக்கம் பெற்றார். 17 வயதுக்கு உட்பட்டோர் ரிக்கர்வ் பிரிவில், ரக்ஷன் வெள்ளி பதக்கத்தை தட்டிச் சென்றார். சீனியர் ரிக்கர்வ் பிரிவில், வில் வித்தை பயிற்சியாளர் தனசேகரன், தங்கம் வென்றார். பதக்கம் வென்ற மாணவ, மாணவியரை, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு பாராட்டினார்.