மரபின் நிழல் ஓவியக் கண்காட்சி 18ம் தேதி வரை நடக்கிறது
புதுச்சேரி: பிரெஞ்சு கட்டடக்கலை நயமும், அமைதியான கடற்கரைக் காற்றும் ஒருசேர சங்கமிக்கும் புதுச்சேரி ஒயிட்டவுன் கலை பண்பாட்டு துறையின் வளர்கலைக் கூடம் இப்போது ஒரு முற்றிலும் மாறுபட்ட கலைப் பதிவாக மரபின் நிழல் ஓவியக் கண்காட்சிக்கு தயாராகியுள்ளது.மரபின் நிழல் வெறும் ஓவியங்களின் தொகுப்பு கண்காட்சி மட்டுமல்ல. அது நம் வேர்களை நோக்கி நம்மை இழுத்துச் செல்லும் ஒரு காலப் பயணமாக இருப்பது சிறப்பு. வரும் 18ம் தேதி வரை நடக்கும் இந்த ஓவிய கண்காட்சியில் 4 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் என, மொத்தம் 8 கலைஞர்களின் அசாத்தியமான கற்பனைத் திறன்கள் கொண்ட ஓவியங்கள் அணிவகுத்து நிற்கின்றன.கிராமிய வாழ்க்கை, கோவில் கட்டடக்கலை, நாட்டுப்புற மரபுகள், பெண்மையின் அடையாளம், நிலப்பரப்புகள் மற்றும் பண்பாட்டு நினைவுகள் போன்ற ஆழமான கருப்பொருள்களை மையமாகக் கொண்டு, மரஅச்சு, ஓவியம், சயனோடைப், கலப்பு ஊடகம், டெரகோட்டா மற்றும் செராமிக் போன்ற 6 வெவ்வேறு கலை படைப்புகள்.இதில் பேராசிரியர் தினகர சுந்தரின் தாமரையின் தனிமை ஓவியங்கள். நீரில் அசைந்தாடும் தாமரை இலையை மட்டுமே மையமாகக் கொண்டு இந்த நீர்வண்ண அற்புதம் படைக்கப்பட்டுள்ளது.அடுத்து ஓவியர் மாதவனின் அக்ரிலிக் அப்ஸ்ட்ராக்ட் ஓவியம். அடர் பச்சை, கருமை மற்றும் தீப்பிழம்பான சிவப்பு நிறங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, தங்களுக்குள் உரையாடுவதை இந்த அப்ஸ்ட்ராக்ட் ஓவியம் கண்முன்னே நிறுத்துகிறது.கோமதி, மதுவந்தியின் மரஅச்சுப் படைப்பு தனி ரகம். தமிழ்நாட்டின் பெருமைமிகு கோவில் கட்டடக்கலையையும், அதன் ஆன்மிக அதிர்வுகளையும் மையமாகக் கொண்டு இந்த மரஅச்சுப் படைப்பு ஓவியங்கள் மலர்ந்துள்ளன.கால மாற்றத்திலும் அழியாத அந்த மரபின் அழகை, புதுச்சேரி ஒயிட் டவுன் வளர்கலை கூடத்தின் சுவர்களில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை வந்து தரிசித்து செல்லலாம்.