கோவை அரசு பாலிடெக்னிக் மாணவிகள் 23 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு
கோவை: அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி விடுதி மாணவிகள் 23 பேர், திடீர் வாந்தி, வயிற்றுபோக்கு மற்றும் மயக்கம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை காந்திபுரத்தில் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் மெக்கானிக்கல், டெக்ஸ்டைல், சிவில் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் டிப்ளமோ படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. கல்லூரியில் 1,300க்கும் அதிகமான மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் பயின்று வருகின்றனர். கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவிகள் இங்கு பயின்று வருகின்றனர். தொலைதூரங்களிலிருந்து வரும் மாணவிகளின் வசதிக்காக, கல்லூரி வளாகத்தில் விடுதியும் செயல்பட்டு வருகிறது. இவ்விடுதியில் 249 மாணவிகள் தங்கி கல்லூரிக்கு சென்று வருகின்றனர். மாணவிகளுக்கான உணவகம் விடுதியில் செயல்பட்டு வருகிறது. தலைமை சமையல்காரர் உட்பட ஆறு பேர் இங்கு பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் 15 பேருக்கு வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டு மயக்கமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் அனைவரும் கல்லூரி வாகனத்தில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவிகளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை வழங்கினர். இந்நிலையில் மேலும் எட்டு விடுதி மாணவிகள் வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டு மயக்கமடைந்ததை அடுத்து அவர்களும் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். அடுத்தடுத்து மாணவிகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு வந்ததால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் ராமநாதன், மாணவிகளிடம் அவர்கள் முந்தைய நாள் உட்கொண்ட உணவு குறித்து விசாரித்தனர். தொடர்ந்து சுகாதார துறை துணை இயக்குனர் சோமசுந்தரம் மாணவிகளின் உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் விசாரித்தார். மேலும், கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். சுகாதார துறை துணை இயக்குனர் சோமசுந்தரம் கூறுகையில், "கல்லூரி விடுதியில் ஆய்வு நடத்தப்பட்டது. முதல் கட்ட ஆய்வில், உணவு கெட்டுப்போனதால் மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம் என, தெரியவந்துள்ளது. மாணவிகள் உட்கொண்ட உணவுகளின் மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகள் தெரிந்த பின்னரே உடல் நலக்குறைவுக்கு காரணம் தெரிய வரும். விடுதியில் உள்ள குடிநீரில் பிரச்னை இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும் அனைத்து மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்றார். பாதிக்கப்பட்ட மாணவி கிருத்திகா கூறுகையில், "நேற்றிரவு (நேற்று முன்தினம்) விடுதி மெஸ்ஸில் இடியாப்பம், சட்னி உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இன்று (நேற்று) காலை இட்லி சட்னி, சாம்பார் வழங்கப்பட்டது. காலையில் எங்களுக்கு திடீர் என வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டது. இங்கு அழைத்து வரப்பட்டோம். கல்லூரியில் குடிநீரில் பிரச்னை இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதனால் தான், உடல்நலக்குறைவு என, தெரிகிறது" என்றார். ஆண்டுதோறும் அவலம் கோவை காந்திபுரத்தில் உள்ள மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் தங்கி பயிலும் மாணவிகள் புட்-பாய்சன் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்தாண்டு இதேபோல் 30க்கும் அதிகமான மாணவிகள் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 2012ம் ஆண்டும் கல்லூரியில் ஏற்பட்ட குடிநீர் பாதிப்பால் மாணவிகள் மருத்துவமனைக்கு சென்ற கதையும் உள்ளது. ஆண்டுதோறும் மாணவிகள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில் அதற்குரிய நிரந்தர தீர்வை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். அச்சத்தால் மயக்கம்? அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கவுசியா ஜமீன் கூறுகையில், "இரண்டு மாணவிகளுக்கு மட்டுமே வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டது. ஒரு சில மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டது. இதை பார்த்த மற்ற மாணவிகளும் அச்சத்தால் தங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்ற எண்ணத்தில் மயக்கமடைந்தனர். இருப்பினும் அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்" என்றார்.