அரசு பள்ளி மாணவர்கள் 3 பேர் இன்ஸ்பயர் விருதுக்கு தேர்வு
மேட்டுப்பாளையம்: மத்திய அரசு மாணவர்களுக்கு வழங்கும், இன்ஸ்பயர் விருது பெற, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த, 3 அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இன்ஸ்பயர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழங்கப்படுகின்றன.மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே உள்ள மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவி மெர்சில்டா, மாணவன் அன்பு, இரும்பறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த இந்துஸ்ரீ ஆகிய மூவரும் இன்ஸ்பயர் விருது பெற தேர்வு பெற்றுள்ளனர். இவர்களை, காரமடை வட்டார கல்வி அலுவலர்கள் ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிவசங்கரி, தலைமை ஆசிரியை பத்திரம்மாள், வழிகாட்டி ஆசிரியர் திருமுருகன உள்ளிட்டோர் பாராட்டினர்.