மாற்றுத்திறனாளி மாணவருக்கான விளையாட்டுப் போட்டிகள்: 399 பேர் பங்கேற்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட அண்ணா விளையாட்டு அரங்கில், மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட இப்போட்டிகளில், மாவட்டம் முழுதிலும் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் சிறப்புப் பள்ளிகளைச் சேர்ந்த 399 மாணவ மாணவியர் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.பார்வைத்திறன் குறைபாடுடையோர், செவித்திறன் குறைபாடுடையோர், கடுமையான உடல் மற்றும் கால் பாதிப்புடையோர், கை பாதிப்புடையோர் என பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டன.இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவியருக்கு, வரும் டிச., 3ம் தேதி நடைபெறும் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி தெரிவித்தார்.