உள்ளூர் செய்திகள்

நூலகம்: புத்தகங்களை திருப்பித்தர தாமதித்தால் 50 காசு போதுமா?

திருப்பூர்: நூலகத்தில் பெற்ற புத்தகங்களை, குறிப்பிட்ட காலக்கெடுக்குள் திருப்பித் தராமல் இழுத்தடிக்கும் உறுப்பினர்களுக்கு நாளொன்றுக்கு 50 காசு வீதம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இத்தொகையை அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. புத்தகத்தின் மதிப்புக்கு ஏற்ப, அபராதத் தொகையை உயர்த்த அரசுக்கு பரிந்துரை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் 152 நூலகங்கள் உள்ளன. ஒரு மாவட்ட மைய நூலகம், 57 கிளை நூலகங்கள், ஒரு மகளிர் இயங்கு நூலகம், 74 ஊர்ப்புற நூலகங்கள், 19 பகுதி நேர நூலகங்கள் அடங்கும். மாவட்ட அளவில் மொத்த உறுப்பினர்கள் 2 லட்சத்து 42 ஆயிரத்து 327. புரவலர்கள் 5 ஆயிரத்து 894, பெரும் புரவலர்கள் 20, கொடையாளர்கள் 27 பேர். மொத்த நூல்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 77 ஆயிரத்து 759. மாநகராட்சிக்கு உட்பட்ட நூலகங்களில் உறுப்பினராக சேர்வதற்கு டிபாசிட் தொகையாக 50 ரூபாய், சந்தாவாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. கிளை நூலகங்களில் டிபாசிட் தொகை 20 ரூபாய், சந்தா 10 ரூபாய், ஊர்ப்புற நூலகங்களில் டிபாசிட் தொகை 15 ரூபாய், சந்தா 5 ரூபாய் பெறப்படுகிறது. உறுப்பினர்கள் 3 புத்தகங்கள் வரை எடுத்துச் செல்லலாம். 14 நாட்கள் வரை புத்தகங்கள் வைத்திருக்க அவகாசம் அளிக்கப்படுகிறது. தவறும் பட்சத்தில் 3 நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்படும். அந்நாட்களையும் மீறி புத்தகங்களை திருப்பித் தராவிட்டால், நாளொன்றுக்கு 50 காசு வீதம் அபராதத் தொகை வசூலிக்கப்படுகிறது. விலையுயர்ந்த புத்தகங்களை நூலகத்தில் இருந்து வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்க 50 ரூபாய் டிபாசிட் தொகை, உரிய நாட்களுக்குள் திருப்பித் தராவிட்டால் அபராத கட்டணம் 50 காசு என்பது மிகவும் குறைந்தபட்ச தொகை. வளர்ந்து வரும் நாகரிக உலகத்தில், தொழில்நுட்பம் நினைத்துப் பார்க்க முடியாத வளர்ச்சியை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலக அளவு என்பர். இப்போது, உள்ளங்கையில் இருக்கும் மொபைல்போன், உலக நடப்புகளை கண் முன் நிறுத்தி விடுகிறது. இருந்த இடத்தில் இருந்தே உலக நிகழ்வுகளை அறியவும், நாம் விரும்பும் தகவல்களை பெறவும் எளிதாக முடிகிறது. கம்ப்யூட்டர் மயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மிடையே இன்றும் பலர் நூலகங்களை நாடிச் செல்கின்றனர். அதற்கேற்ப நூலகத்தின் செயல்பாட்டில் மாற்றம் கொண்டு வர வேண்டும். விலையுயர்ந்த புத்தகங்களை பாதுகாக்கும் பொருட்டு, டிபாசிட் மற்றும் அபராத தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக, மாவட்ட நூலக அலுவலர் மணிகண்டனிடம் கேட்டபோது, "நூலகங்களில் இருந்து எடுத்துச் செல்லும் புத்தகங்களை உரிய நாட்களுக்குள் திருப்பி ஒப்படைக்காத உறுப்பினர்களிடம், நாளொன்றுக்கு அபராதமாக 50 காசு வசூலிக்கப்படுகிறது. இது மிகக் குறைந்த கட்டணம். விலையுயர்ந்த புத்தகங்களுக்கு இணையாக, மதிப்புக்கு ஏற்ப அபராத தொகையை உயர்த்த அரசுக்கு பரிந்துரைக்கப்படும்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்